சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்லவிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்திற்கு, இணையதளங்கள் மூலமாக வந்த வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, இன்று காலை 8.30 மணிக்குச் சென்னையில் இருந்து 168 பயணிகளுடன், கொல்கத்தா செல்ல இருந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புறப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது.
அதோடு பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் சென்னை விமான நிலையத்தின் ஒதுக்கப்புறமான பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய்கள் உதவியுடன், தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால் விமானத்தில் வெடிகுண்டு எதுவும் இல்லை என சோதனையில் தெரியவந்தது. ஆனாலும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, ஓய்வு அறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த அனைத்து பயணிகளையும், தீவிரமாகச் சோதனைகள் நடத்தினர்.
அதோடு பயணிகளின் கைப்பை போன்றவையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்று தெரியவந்தது. இதை அடுத்து பயணிகள் அனைவரும் மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டு, அந்த விமானம் 5 மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து இன்று பகல் 1.30 மணிக்கு, கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்றது.
இதையும் படிங்க: இண்டிகோ விமானங்களுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்.. நடப்பது என்ன? - Bomb Threat To Indigo Flight