சென்னை: கடந்த 15ஆம் தேதி, வடபழனி, ராஜமங்கலம், சீரணி அரங்கம், திருவான்மியூர், வடக்கு கடற்கரை, வில்லிவாக்கம், கீழ்பாக்கம் உள்ளிட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிபிசிஐடி போலீசில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிடிவாரண்டை அமல்படுத்த கால அவகாசம் கோரினார்.
இதை ஏற்க மறுத்த சென்னை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெ.சந்திரன், "5 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பலமுறை அறிவுறுத்தியுள்ளன. ஆனால், தொடர்ந்து அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்படுகிறது.
இதையும் படிங்க: தஞ்சை பீச்சோரம் கிடந்த பை.. அதிர்ந்த போலீசார்.. ரூ.2 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல்!
நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு சம்பந்தப்பட்ட காவல்நிலைய ஆய்வாளர்கள் ஒத்துழைப்பதில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு பலமுறை கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனவே, இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 8 காவல் ஆய்வாளர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் நவம்பர் 25ஆம் தேதிக்குள் சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை குழுவில் டெபாசிட் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்