கிருஷ்ணகிரி: கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநில எல்லைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, அணை முழு கொள்ளளவான 44.28 கன அடியில், 42.64 கனஅடி நீர் தேக்கப்பட்டுள்ளது.
கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் அதிகப்படியாக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், ஓசூர் - நந்திமங்கலம் சாலையில் தட்டகானப்பள்ளி அருகே உள்ள ஆற்றின் தரைப்பாலம் நீரில் முழுமையாக மூழ்கி, தரைப்பாலத்தின் மீது 30 அடி உயரத்திற்கு மேலாக ரசாயன நுரைகள் பொங்கிய நிலையில் காட்சியளித்துள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தட்டனப்பள்ளி, நந்திமங்கலம், சித்தனப்பள்ளி, தேவிசெட்டிப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பதால் 15 கிமீ தூரம் சுற்றி ஓசூருக்கு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒசூர் தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, தரைப்பாலத்தில் குவியலாக இருந்த ரசாயன நுரைகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையில் நீர் திறப்பு.. தரைப்பாலத்தை மூழ்கடித்த ரசாயன நுரை!
இதில், நுரைகள் அனைத்தும் அகற்றப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை அதிகப்படியான நுரையானது சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் இருந்ததால், நுரையை வெளியேற்ற முடியாமல் தீயணைப்புத் துறையினர் திரும்பிச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தொடர்ந்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் கூறுகையில், “இந்த நுரையின் காரணமாக நாங்கள் சுமார் 10, 15 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. காலையில் வேலைக்குச் செல்ல முடியாமல், வேறு வழியாக சென்றோம். தற்போது அகற்றப்பட்டிருக்கும் என்று இந்த பாதையில் மீண்டும் வந்தோம். ஆனால், இதுவரை பாதை சரி செய்யப்படவில்லை. எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் பாதையில் உள்ள நுரையை வெளியேற்றி போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்