சென்னை: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை மந்தமாக நடந்து வருவதால், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி புகார்தாரரான நல்லதம்பி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகிலன், வழக்கின் புலன்விசாரணை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சி துணைத் தலைவராக அங்கீகரிக்காத சபாநாயகரை கண்டித்து, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து, சிவகாசி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த மனுவை, நீதிபதி ஜெயச்சந்திரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.