கரூர்: திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை, அண்ணா நகரில் வசித்து வருபவர் சோமசுந்தரம். இவரது மனைவி உமா மகேஸ்வரி (47). அதே, பெட்டவாய்த்தலை வைகோ நகரில் வசிக்கும் சரவணகுமார் மனைவி உஷா. இருவரும், கரூர் மாவட்டம், குளித்தலை ஒன்றியம், ஆதினத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை இருவரும் குளித்தலை பெரிய பாலத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஆசிரியை உஷா இருசக்கர வாகனத்தை இயக்கிய நிலையில், ஆசிரியை உமா மகேஸ்வரி பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.
இருவரும் குமாரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, இவர்களை பின் தொடர்ந்து ஒரு பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு பேர், திடீரென ஸ்கூட்டியில், பின்னாடி அமர்ந்து வந்த ஆசிரியை உமா மகேஸ்வரியின் கழுத்தில், அணிந்திருந்த 7 சவரன் தங்க தாலி செயினை பறிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, உமா மகேஸ்வரி செயினை விடாமல் பிடித்துக் கொண்டதால், கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
உமா மகேஸ்வரி கீழே விழுந்ததும் செயின் திருட வந்த மர்ம நபர்கள் இருவரும் பைக்கில் தப்பிச் சென்றுள்ளனர். நெடுஞ்சாலையில், கீழே விழுந்ததில், உமா மகேஸ்வரிக்கு தலை மற்றும் தோல்பட்டை பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. குளித்தலை மாவட்ட அரசு மருத்துவமனையில் உமா மகேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியை உமா மகேஸ்வரி குளித்தலை போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு செயின் பறிக்க முயன்ற இருவரை தேடிவருகின்றனர். குளித்தலையில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.