சென்னை: இந்தியாவில் 'மிகவும் கொடூரமான நாய்கள்' என வரையறுக்கப்படும் 23 வகையான நாய்களை விற்கவும், இனப்பெருக்கம் செய்யவும் மத்திய அரசு தடைவிதித்தது. ஆனால் இந்த தடையை எதிர்த்து சமூக ஆர்வலர்கள் மற்றும் செல்லப்பிராணி வளர்ப்பாளர்கள் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டு, தடைக்கு இடைக்கால தடை பெறப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட இந்த வகை நாய்களால் மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதை உறுதி செய்யும் வகையில், சென்னையை சேர்ந்த 5 வயது சிறுமியை, 2 ராட்வைலர் நாய்கள் கடித்து குதறியுள்ளன.
அந்த குழந்தையை காப்பாற்ற சென்ற அவரின் தாயையும் அந்த நாய்கள் கடித்துள்ளன. நாய்களின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியுள்ள சிறுமியும், அவரின் தாயும் தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில் இதற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துளளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்.,: "சிறுமியை கடித்த நாயின் உரிமையாளரான புகழேந்தி மற்றும் அவரது மனைவி தனலட்சுமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாயை வளர்த்த குற்றத்தின் பேரில் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்". இந்த சூழலில் இதுபோன்ற நிகழ்வுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை மேற்கொண்டது? மிகவும் கொடூரமான நாய்கள்' என வரையறுக்கப்படும் 23 வகையான நாய்களை வளர்க்கலாமா? கூடாதா? இந்த வகை நாய்களிடம் இருந்து மனித உயிர்களை காப்பாற்ற என்ன சட்டம் உள்ளது? இதற்கு எதிராக பொதுமக்கள் எப்படி தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற வகையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராதாகிருஷ்ணன்.,: "விலங்குகளுக்கு ஆதரவாக அனைத்து சட்ட வரைமுறைகளும் இருக்கின்றன, ப்ளூ க்ராஸ், சமூக ஆர்வலர்கள், செல்லப் பிராணிகளை வளர்போர் என அனைத்து தரப்பில் இருந்தும் விலங்குகளுக்கு ஆதரவளிக்கப்படுகிறது. இந்த சூழலில் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது நம் கடமை. மேலும், தற்போது உள்ள சட்டங்கள், விலங்கு நல பாதுகாப்பு விதிகள், உச்சநீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்ட சில கருத்துக்கள் தெரு நாய்களுக்கு உணவு கொடுப்பதை கூட தடுக்க முடியாத வகையில் இருக்கிறது.
மேலும், நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டால் எந்த இடத்தில் இருந்து அந்த நாய்கள் பிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் திருப்பி விட வேண்டும் உள்ளிட்ட பல சட்டங்களை 2008 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த சூழலில் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நடைபெறும்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு மாநகராட்சி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் சென்று தீர்வுகான முடிவு செய்திருக்கிறோம். கால்நடை ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு கருத்துக்களும் கேட்கப்பட்டு சுமூகமான மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சட்டங்கள் மாற்றி அமைக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமீபத்தில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் 150 தெரு நாய்களை பிடித்த காரணத்திற்காக, மாநகராட்சி நிர்வாகத்தை குறை சொல்லியும், அவதூறு ஏற்படுத்தியும் ஏராளமான விமர்சனங்கள் வந்தன". என அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகளால் கூட போதிய நடவடிக்கை எடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் நிலை என்ன என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
வீட்டில் வளர்க்க மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டிருந்த நாய்கள் எவை தெரியுமா?
1, பிட்புல் டெரியர்
2, டோசா இனு
3, அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷைர் டெரியர்
4, ஃபிலா பிரேசிலிரோ
5, டோகோ அர்ஜென்டினோ
6, அமெரிக்கன் புல்டாக்
7, போர்போயல்
8, கங்கல்
9, மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய் (ஓவ்சர்கா)
10, காகசியன் ஷெப்பர்ட் நாய் (ஒவ்சார்கா) போன்ற இனங்கள் (கலப்பு மற்றும் குறுக்கு இனங்கள் உட்பட)
11, தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய் (ovcharka) Tornjak
12, ஜப்பானிய டோசா மற்றும் அகிதா
13, Mastiffs (boerbulls)
14, ராட்வைலர்
15, Terriers
16, Rhodesian Ridgeback
17, Wolf Dogs
18, Canario
19, Akbash
20, மாஸ்கோ காவலர் நாய்
21, கேன் கோர்சோ
22, Sarplaninac
23, ஒவ்வொரு நாய் பான் டாக் (அல்லது பான்டாக்) என்று பொதுவாக அறியப்படும் வகை.
இந்த வகையை சேர்ந்த நாய்கள் விற்பனை மற்றும் இனப்பெருக்கத்திற்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது அந்த தடை சட்டத்திற்கு இடைகால தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக என்ன முடிவு கிடைக்கப்போகிறது, பொதுமக்களின் பாதுகாப்பு எப்படி உறுதி செய்யப்பட போகிறது என்பது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
இதையும் படிங்க: தெரு நாய்கள் பிரச்சனை..சட்டம் சொல்வது என்ன? மக்கள் மற்றும் என்ஜிஓக்கள் கேட்பது என்ன?