தேனி: தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழ்வது முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் முல்லைப் பெரியாறு அணையில் பருவ காலங்களின் போது ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து பராமரிக்க, கடந்த 2014இல் மூவர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
பின், 2022ஆம் ஆண்டில் இந்தக் குழுவில் இரு மாநில தொழில்நுட்ப வல்லுநர்கள் இருவரைச் சேர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மத்திய குழுவுக்கு உதவியாக, 5 போ் கொண்ட துணைக் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் மத்திய துணை கண்காணிப்பு குழு அணைப் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு மத்திய குழுவிற்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் தற்போது கேரளாவில் பல்வேறு பகுதிகளிலும் முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தற்போது அணையின் நீர்மட்டம் 120.55 அடியாக உள்ள உள்ள நிலையிலும், நீர்வரத்து அணைக்கு இன்று காலை நேர நிலவரப்படி 518. 20 கன அடியாகவும் உள்ளது.
இதையும் படிங்க: சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - தேனி கோர்ட் அதிரடி..!
பருவமழை பெய்து வருவதன் காரணமாகவும் இன்று மத்திய நீர்வள துணைக் கண்காணிப்புக் குழு தலைவரான நீா்வள ஆணைய செயற்பொறியாளா் சதீஷ்குமாா், தமிழக பிரதிநிதிகளான பெரியாறு சிறப்பு கோட்டச் செயற்பொறியாளா் சாம் இர்வின், உதவிச் செயற்பொறியாளா் குமார் மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகளான கட்டப்பனை அணில் குமார் நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் உதவிப் பொறியாளா் அருண் ஆகியோர் கொண்ட குழுவினர் அணைப் பகுதியில் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள தேக்கடி படகுத்துறையில் இருந்து தமிழக, கேரளா அதிகாரிகள் படகின் மூலமாக அணைப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இக்குழுவினர் பிரதான அணை, பேபி அணை, கேலரி பகுதி, மதகுப் பகுதி மற்றும் மழையின் அளவு, அணையின் நீா்வரத்து, நீா் வெளியேற்றம் மதகுப் பகுதியில் நீர்க்கசிவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
அதனைத் தொடா்ந்து மாலை குமுளியிலுள்ள பெரியாறு அணை கண்காணிப்புக் குழு அலுவலகத்தில், துணைக் குழுவினா் ஆலோசனைக் கூட்டம் நடத்துகின்றனர். இந்த கூட்டத்தில், அணைப் பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வு சம்பந்தமான அறிக்கையை மத்திய நீர்வள தலைமைக் கண்காணிப்பு குழுவிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்