தஞ்சாவூர்: நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதியோடு பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாடுதுறை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினை ஆதரித்து கும்பகோணத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் திறந்த வெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டனர்.
கும்பகோணம் தலைமை அஞ்சலகம் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடந்த இந்த பிரசாரத்தில் மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயண திருப்பதி உள்ளிட்ட பாஜகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
ஆயிகுளம் சாலை, தலைமை அஞ்சலக சந்திப்பிலிருந்து மகாமக குளம் அருகேயுள்ள வீரசைவ பெரிய மடத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்து அண்ணல் அம்பேத்கரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து பிரசார வாகனத்தில் நின்றபடி மத்திய அமைச்சர் வி.கே.சிங் மக்களிடையே பேசினார்.
அப்போது பேசும் போது, தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார். தொடர்ந்து பேசுகையில், "கடந்த 10 ஆண்களில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைப் பெற்றுள்ளது. குறிப்பாகத் தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி பெற்று உலக அளவில் இந்திய முக்கிய இடம் பெற்றுள்ளது.
மோடி பலம் வாய்ந்த தலைவர். அவர் 3வது முறையாக மட்டுமல்ல, இன்னும் 3 முறை பிரதமராகும் தகுதி பெற்றவர். நாட்டின் வளர்ச்சி, எதிர்கால குழந்தைகள் நலனுக்கான வளர்ச்சி, அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டும். எனவே நீங்கள் அனைவரும் ம.க.ஸ்டாலினுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களித்து அவரை மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக அவரை வெற்றி பெறச் செய்யுங்கள்" என்று பேசினார்.
மேலும், "இதற்காக நீங்கள் இன்னும் அடுத்த 3 நாட்களுக்குக் கடுமையாக உழைக்க வேண்டும். வேட்பாளர் ம.க.ஸ்டாலினின் வெற்றி பாமகவின் வெற்றி மட்டுமல்ல, பாஜகவின் வெற்றியும் தான் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பிரசாரத்தின் போது பேசினார்.
இதையும் படிங்க: "அரசியலமைப்புச் சட்டத்தைச் சிதைக்க நினைக்கிறார் பிரதமர் மோடி" - வைகோ குற்றச்சாட்டு