தென்காசி: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் அனல் பறக்க தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடம் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியனை ஆதரித்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாலை ராஜபாளையத்தில் நடைபெற்ற ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார். ராஜபாளையம் சொக்கர் கோயில் முதல் பழைய பேருந்து நிலையம் வரை திறந்த வாகனத்தில் ஊர்வலமாக (ரோடு ஷோ) சென்று பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, "காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவை உலக வல்லரசு நாடுகள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஆனால், இன்றைக்கு இந்தியாவுடன் நட்பு பாராட்ட அந்த நாடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன. உலக அரங்கில் இந்தியா தலைநிமிர்ந்து நடப்பதற்கு பிரதமர் மோடி தான் காரணம். தேசிய ஜனநாயக கூட்டணி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. ஆனால், இந்தியா கூட்டணி தலைவர்கள் தங்களின் குடும்பத்தின் வளர்ச்சிக்காக ஆட்சிக்கு வர துடிக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் உலக பொருளாதாரத்தில் 11 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வரும்போது, 2027ல் உலக அளவில் 3 வது பெரிய பொருளாதார நாடக இந்தியா உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தியா மீது அண்டை நாடுகள் அடிக்கடி தாக்குதல் நடத்தும். ஆனால், இன்று இந்தியா என்ற பெயரை உச்சரிக்கக் நமது எதிரி நாடுகள் பயப்படுகின்றன. இதற்கு காரணமும் பிரதமர் மோடி.
உலக அரங்கில் இந்தியா சூப்பர் பவராக மாறுவதற்கும், வல்லரசாக மாறுவதற்கும் ஜான் பாண்டியனின் வெற்றி அவசியம். ஜான் பாண்டியனை வெற்றி பெற வைத்து நாடாளுமன்றத்திற்கு நீங்கள் அனுப்பினால், நன்றி சொல்வதற்காக உங்களை பார்க்க மீண்டும் வருவேன்” இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ரோடு ஷோ மேற்கொண்ட நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எந்த விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு, ராஜபாளையம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 10,214 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! - Lok Sabha Election 2024