சென்னை: கிண்டி பேருந்து நிலையம் அருகில், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில அக்கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், "மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தை கேவலப்படுத்துகிறது. தமிழ்நாடு, கேரளம் போன்ற எதிர்க்கட்சி ஆள்கின்ற மாநிலங்களை புறக்கணிக்கிறது. இது அம்பானி அதானிக்கான பட்ஜெட். பாமர மக்களுக்கான பட்ஜெட் இல்லை.
இந்த பட்ஜெடின் மூலம் இந்திய மக்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாகி உள்ளது. வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது. இந்த நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டித்ததும், நிதி அயோக் கூட்டத்தை புறக்கணித்ததும் பாராட்டுக்குறியது" என்றார்.
அதனை தொடர்ந்து அவர் பேசுகையில்," நாடாளுமன்றத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி பேசியபோது, சாதி வாரி கணக்கெடுப்பு பற்றி பேச ராகுல் காந்திக்கு தகுதியில்லை என அனுராக் தாக்கூர் பேசியது வன்மையாக கண்டனத்திற்குரியது. ஏற்கனவே 2011 ஆம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து எடுக்கப்பட்டது.
ஆனால் இப்போது சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்க பாஜக அரசு தயங்குகிறது.எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்தும் இதனை பாஜக அரசு செய்யவில்லை. கேரளாவில் ஏற்பட்டுள்ள தேசிய பேரிடர் போல் ஒரு பேரிடர் இந்தியாவில் ஏற்படிருக்காது.
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுப்பணித்துறை அமைச்சரை அனுப்பி 5 கோடி நிதி கொடுத்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் அதிகாரிகளை மீட்பு குழுவினரை அனுபியுள்ளார்கள். இதற்காக தமிழ்நாடு முதலமைச்சரை பாரட்டுகிறோம்.ஆனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாக உண்மைக்கு புறம்பாக பேசுகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் அரசியல் விளம்பரத்திற்காக இவ்வாறு பேசி அவர் வருகிறார்" என்று பாலகிருஷ்ணன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்