சென்னை: பல வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஹிஜிபுதாஹிர் அமைப்பின் மூலமாக உலகளாவிய காலிபெட் இஸ்லாமிய கொள்கை முறையை ஷரியா சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வர முயன்றதாக சென்னை சைபர் கிரைம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், பொறியாளர் அமீர் உசேன் என்பவரும், அவரது தந்தை மன்சூர் மற்றும் சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரையும், மேலும் முகமது மவுரிஸ், காதர் நவாஸ் செரிப், அகமது அலி உமரி உள்ளிட்ட 6 பேரை மீது UAPA சட்டத்தின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக அவர்களிடம் விசாரித்தபோது, இவர்கள் ஹிஜிபுதாகிர் அமைப்பின் சிந்தனைகளை பரப்புவதை முக்கியமாக செய்து வருவது தெரிய வந்தது. மேலும், அமீர் உசேன் இது குறித்த பல்வேறு வீடியோக்களை யூடியூபில் வெளியிட்டுள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
மேலும், இந்த அமைப்பின் கொள்கைப்படி ஜனநாயகத்தின் நம்பிக்கை இல்லாமல் காலிபெட் கொள்கை முறையில் மக்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும், காணொலிக் காட்சி மூலமாக கூட்டங்கள் நடத்துவதும் குறிப்பிட்ட நபர்களை மட்டும் அழைத்து பூட்டப்பட்ட அறைக்குள் கூட்டங்களை நடத்தியதையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதுமட்டுமல்லாது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் அதிகளவு கூட்டங்களை நடத்தியதாகவும், ஒவ்வொரு வாரம் நடத்தப்பட்ட கூட்டங்களில் ஆட்கள் அதிகமாக சேர்ந்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆறு பேருடனும் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்தும், இதற்கு நிதி எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஓராண்டுக்கும் மேலாக யூடியூப் மூலமாக இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்தனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைதாப்பேட்டை போலீசார் இவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டு, டிஜிட்டல் ஆவணங்கள், செல்போன்கள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த வழக்கில் கைதான முக்கிய நபர் அமீர் உசேனை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று முதல் அமீர் உசேனிடம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் தனியாக வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பாஜக நிலை? ராகுல் காந்தி ஸ்டைலில் பதில் சொன்ன ஜோதிமணி!