கரூர்: கரூர் அருகே உள்ள வாங்கல் மாரிகவுண்டன்பாளையத்தின் ஒரு வீட்டில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, நள்ளிரவு ஒரு மணி அளவில், கோடை வெப்பத்தின் காரணமாக இரவு நேரத்தில் ஒரு குடும்பத்தினர் வீட்டின் உள் அறையில் தூங்க முடியாத காரணத்தினால், குடும்பத்துடன் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது முகத்தில் துணியைக் கட்டி மூடிக் கொண்டு, வேட்டியை மடித்து கட்டிக்கொண்டும் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், லாபகமாக திருடுவதற்கு வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி வீடியோவைக் கண்டு, வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் சிசிடிவி காட்சியில், சிறிய வகை டார்ச் லைட் அடித்து, உறங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் கழுத்தில் ஏதும் தங்க நகைகள் அணிந்துள்ளனரா என்று சத்தம் இல்லாமல் நோட்டமிடும் வகையில் காட்சி பதிவாகியுள்ளது. இதனால் வாங்கல், மன்மங்கலம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கோடை வெப்பம் தாங்க முடியாமல் காற்றோட்டமாக வீட்டில் வெளியே படுத்து உறங்கும் குடும்பத்தினர் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து வாங்கல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருமகின்றனர்.
இந்த நிலையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"கோடை காலம் என்பதால், வெப்பத்தின் காரணமாக வீட்டின் கதவைத் திறந்து வைத்து வெளியே யாரும் தூங்க வேண்டாம். தங்களது உடைமைகள், விலை உயர்ந்த பொருட்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். கோடை காலங்களில் விடுமுறைக்கு சொந்த ஊர் மற்றும் சுற்றுலா செல்பவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு, மாவட்ட காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:'நாட்டாமை' பட பாணியில் ஊரைவிட்டு ஒதுக்கியதாக புகார்.. நெல்லையில் ஓர் நவீன தீண்டாமையா சர்ச்சை.. பின்னணி என்ன?