தருமபுரி: தொப்பூர் கணவாய் பகுதியில் உள்ள இரட்டை பாலத்தில் நேற்று (ஜன. 24) மாலை அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்த நிலையில் பாலத்திற்கு மேல் இருந்த லாரி மற்றும் 2 கார்கள் தீப்பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
விபத்துக்குள்ளான கார்கள் லாரியின் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் காரில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர். இந்நிலையில் காரில் குழந்தைகள் இருப்பதை அறிந்து வந்த இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக மூன்று குழந்தைகளை மீட்டனர். இளைஞர்கள் குழந்தைகளை மீட்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
அதை தொடர்ந்து காரினுள் இருந்தவர்களை மீட்பதற்குள் லாரியில் இருந்த தீ காரை பற்றிக் கொண்டதால் அவர்களால் மீட்க முடியாமல் குழந்தைகளை மட்டும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் வினோத் என்பவரின் 6 வயது குழந்தை ஜெஸ்வின், 2 வயது விஜயஷா என்ற குழந்தை மற்றும் விமல் என்பவரின் நான்கு மாத பெண் கைக்குழந்தை சிக்கியது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் சேலத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நான்கு மாத கைக்குழந்தையின் பெற்றோர் விமல் மற்றும் அவரது தாயார் அனுஷ்கா பரிதாபமாக இந்த விபத்தில் உயிரிழந்ததனர். இந்த விபத்தின் போது துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட நான்கு இளைஞர்களுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், தொப்பூர் இரட்டைப் பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.50 ஆயிரம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. நடந்தது என்ன?