புதுச்சேரி: தமிழ்நாடு கல்வி வாரியத்தின் கீழ் இருந்த புதுச்சேரி அரசுப் பள்ளி தற்போது சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு மாறியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களில் 10,12 ம் வகுப்பு தவிர்த்து அனைத்து வகுப்புகளும் 2023-24 கல்வியாண்டில் மாறின. தற்போது 2024-25 ம் கல்வியாண்டில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை சிபிஐசிக்கு மாறியுள்ளன.
இதனையொட்டி 2024-25ம் கல்வியாண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று துவங்கியது. இதனால் புதுச்சேரி,காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் இன்று பள்ளிகள் தொடங்கின. பள்ளி தொடங்கி முதல் நாளான இன்று மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
மேலும், முதல் நாளிலே மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டதால் மாணவர்கள் புத்தகத்தை ஆர்வத்துடன் பெற்றனர். இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், புதுச்சேரியில் ஏராளமான அரசுப் பள்ளிகள் இருந்தாலும் பெற்றோர் அதிக அளவில் தனியார்ப் பள்ளிகளில் நாடி சென்றனர். காரணம் அங்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் எடுக்கப்பட்டது. தற்பொழுது புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலுக்கு வந்துள்ளதால் மாணவர்களை அரசுப் பள்ளிக்கு ஆர்வத்துடன் பெற்றோர் கொண்டு வந்து சேர்த்தனர்.
மேலும், புதுச்சேரி கல்வித்துறை அடுத்த நிலைக்குச் சென்றுள்ளது சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்காகத் தனியார்ப் பள்ளிகளில் நாடிய பெற்றோர் தற்பொழுது புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் நோக்கி வருகிறார்கள், முதல் நாளை மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என தெரிவித்தார்.
புதுச்சேரியில் இன்று துவங்கியுள்ள பள்ளிகள் ஒரு மாத காலம் செயல்படும். மே 1ம் தேதி முதல் ஜூன் 2 ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது.