சென்னை: தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்து ஓய்வு பெற்றவர் பொன் மாணிக்கவேல். இவர் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஐஜி ஆகவும், பிறகு ஐஜி ஆகவும், சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார்.
மேலும் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளின் மூலம், வெளிநாடுகளுக்குக் கடத்த முயன்ற பல்வேறு பாரம்பரிய சிலைகளை மீட்டு உள்ளார். இந்த நிலையில் இன்று காலை முதல் சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2008ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் விவசாய நிலத்தில் மூன்று உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த மூன்று சிலைகளையும் காவல்துறையில் பணியாற்றிய டிஎஸ்பி காதர்பாஷா என்பவரும் கோயம்பேடு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வந்த சுப்புராஜ் ஆகிய இருவரும் விவசாயி உடன் சேர்ந்து விற்று விட்டதாகக் கடந்த 2018ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆக இருந்த பொன் மாணிக்கவேல் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
மேலும் அந்த வழக்கில் டிஎஸ்பி காதர் பாஷாவையும், எஸ்எஸ்ஐ சுப்புராஜையும் பொன் மாணிக்கவேல் கைது செய்தார். இந்த வாழ்க்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎஸ்பி காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார். அதில் உயர்நீதி மன்றத்தால் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தன் மீதும் சில காவல்துறை அதிகாரிகள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாகவும், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், இன்று காலை முதல் சென்னை பாலவாக்கம் பகுதியில் உள்ள முன்னாள் ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: லஞ்சம் வாங்கிய கே.வி.குப்பம் சார்பதிவாளர் சஸ்பெண்ட்.. வீடியோ பரவிய நிலையில் அதிரடி!