கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில அபகரிப்பு வழக்கில் தொடர்புடையதாக, கரூர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனு இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கடந்த 26 நாட்களுக்கும் மேலாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இத்தகைய சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய மூன்று இடங்களில் சிபிசிஐடி போலீசார் நேற்று (ஜூலை 6) சோதனை நடத்தியதை அடுத்து, இன்று (ஜூலை 7) இரண்டாவது நாளாக சிபிசிஐடி போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கரூர் - கோவை சாலையில் உள்ள என்.எஸ்.ஆர் நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, ரெயின்போ நகரில் உள்ள அவரது சாயப்பட்டறை அலுவலகம், ரெயின்போ அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவரது சகோதரர் சேகர் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள் என 7க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையில், இரண்டு டிஎஸ்பிக்கள் மற்றும் 9 ஆய்வாளர்கள் என திருச்சி, சேலம், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த சிபிசிஐடி போலீசார் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அதிமுக நிர்வாகிகள் சோதனை நடைபெறும் இடங்களில் கூடியுள்ளதால், கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யும் விவகாரம்: வழக்கு விசாரணையை ஒத்திவைத்த உயர் நீதிமன்றம்