சென்னை: காவேரி கூக்குரல் இயக்கத்தின் விடாமுயற்சியால், ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான கடந்த ஒரு வருடத்தில் 48 ஆயிரத்து748 விவசாயிகள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 28 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 1கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 630 மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
உலக பூமி தினமான இன்று, இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் இவ்வியக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் பங்கேற்று கூறியதாவது,“காவேரி கூக்குரல் இயக்கம் என்பது சத்குரு அவர்களால் 26 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதையாகும். 1998ஆம் ஆண்டு முதல் ஈஷா பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளை வெவ்வேறு பெயர்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறது.
அதில் ஒரு அங்கமாக, தமிழகத்தின் பசுமைப்பரப்பை அதிகரித்தல், நதிகளுக்கு புத்துயிர் அளித்தல், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் ஊக்குவித்து வருகிறது. மேலும், விவசாயிகளுக்கு தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது, மரம்சார்ந்த விவசாயம் செய்வதற்கு பயிற்சி அளிப்பது, முன்னோடி விவசாயிகளின் நிலங்களில் மாபெரும் கருத்தரங்குகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளையும் செய்து வருகிறது.
இதற்காக, கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு இடங்களில் நாங்கள் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் விநியோகித்து வருகிறோம். கடலூரில் உள்ள ஈஷா நர்சரியானது உலகின் மிகப்பெரிய நர்சரிகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஒரு ஆண்டில் 85 லட்சம் மரக்கன்றுகள் வரை உற்பத்தி செய்ய முடியும்.
இதுதவிர, 39 இடங்களில் விநியோக நர்சரிகளை நடத்தி வருகிறோம். இங்கு தேக்கு, செம்மரம், சந்தனம், ரோஸ்வுட் உட்பட 29 வகையான விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகளை ரூ.3 என்ற மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளிக்கும் விதமாக, அவர்களே மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வாய்ப்பையும் நாங்கள் வழங்கி வருகிறோம்.
அந்த வகையில், கடந்தாண்டு 30 விவசாயிகள் சுமார் 50 லட்சம் மரக்கன்றுகளை தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்து வழங்கியுள்ளனர். இதில், சுமார் 25 சதவீதம் விவசாயிகள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 12 விவசாயிகள் 12 மாவட்டங்களில் ஈஷா விநியோக நர்சரிகள் மூலம் சுமார் 14 லட்சம் மரக்கன்றுகளை விநியோகம் செய்து அதன்மூலம் கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளனர்.
காவேரி கூக்குரல் இயக்கத்தில் மொத்தம் 130 களப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு 31 ஆயிரத்து 400 விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அங்குள்ள நிலத்தின் மண் மற்றும் நீரின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப மர விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.
மேலும், 100க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் 29 ஆயிரத்து 800 விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3 மிகப்பெரிய கருத்தரங்குகளையும், 12 மண்டல அளவிலான கருத்தரங்குகளை நடத்தினோம். இதில் சுமார் 6,000 விவசாயிகள் நேரில் பங்கேற்று பயன்பெற்றனர்.
சத்குருவின் பிறந்த நாள், நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்களில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதுபோன்ற பல்வேறு வகையான செயல்பாடுகளால் தான் எங்களுடைய 1.12 கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கு பூர்த்தி ஆகியுள்ளது. இந்த மாதம் தொடங்கியுள்ள நடப்பு நிதியாண்டில் (2024 - 25) காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூவாகம் திருவிழா : மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற சென்னை திருநங்கை..! - Koovagam Festival 2024