ஈரோடு: பெருந்துறை அடுத்து சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே திமுகவின் கூட்டணி கட்சியாக உள்ள புதிய திராவிட கழகம் மற்றும் வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்கம் சார்பில் கொங்கு நாட்டின் சமூக நீதி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் மாநாட்டிற்கு முன்பு கட்சியினர் டிராக்டர், பைக்குகள், ஜீப் மற்றும் வாகனங்களில் கட்சிக் கொடியை கட்டி சாலைகளில் வாகனங்களை முன் புறமாகவும், பின் புறமாகவும் இயக்கி புழுதி பறக்கச் சாகசங்கள் செய்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புழுதி பரவியது. மேலும் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து அவற்றைத் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையினர் முயற்சித்தனர். இந்நிலையில் பெருந்துறை காவல் நிலையத்தில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது, போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இருசக்கர வாகனம், மூன்று டிராக்டர்கள் மற்றும் ஆறு கார்களில் வந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் நடைபெற்ற கொங்கு நாடு சமூக நீதி மாநாட்டில் இதேபோல் அரசியல் கட்சியினர் வாகன சாகசத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் அரசியல் கட்சியினரின் இது போன்ற வாகன சாகசத்தால் விபத்து ஏற்படும் எனவும், இதனைத் தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடரும் அரசியல் கட்சியினரின் வாகன அட்ராசிட்டி…கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் சமூக நீதி மாநாட்டில் கட்சியினர் அலப்பறை!