தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் அண்ணாநகர் 12வது தெரு மங்களபுரத்தை சேர்ந்தவர் சங்கர் கணேஷ்(49). இவர் கடந்த 2018 ஆகஸ்ட் முதல் 2023 ஆகஸ்ட் வரை தூத்துக்குடி கூட்டுறவு பண்டக சாலையில் தலைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 13ஆம் தேதியன்று, நடந்த சிறப்பு மகாசபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த கூட்டுறவு துறை ஆய்வாளர் தனலட்சுமி, சங்கர் கணேஷை உடல் ஊனத்தை குறிப்பிட்டும், சாதியை சொல்லியும் திட்டியதாகக் கூறப்படுகிறது.
பின்னர் இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளரிடம் புகார் அளிக்க சென்றபோது, அந்த அலுவலக கண்காணிப்பாளர் ஜோ, பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், போலீசிலும் புகார் அளிக்க வேண்டாம் என்றும் கூறியதாக தெரிகிறது.
ஆனால்,சங்கர் கணேஷ்(49) புகார் அளித்து 5 மாதங்களாகியும் தனலட்சுமி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் உரிய விசாரணை நடத்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, தூத்துக்குடி தென்பாகம் போலீசார் கூட்டுறவு அதிகாரி தனலட்சுமி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சங்கர் கணேஷ் ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திடம் கூறுகையில், "தூத்துக்குடி சிதம்பரநகரில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி கூட்டுறவு பண்டகசாலையில் (0.1020) 2018 ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஆகஸ்ட் மாதம் வரை 5 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பு வகித்து வந்தேன். அதையடுத்து பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், அதன் பின்னர் தேர்தல் நடைபெறாததால், தற்போது கூட்டுறவுத் துறை இயக்குநராக தனலெட்சுமி செயல்பட்டு வருகிறார்.
சாதி பெயரை சொல்லி திட்டிய அதிகாரி: நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாகன விபத்தில், இடது கை மணிக்கட்டு தூண்டாகி மாற்றுத்திறனாளியாகிவிட்டேன். நான் தலைவராக இருந்தபோது, அடிக்கடி தனலெட்சுமி கூட்டுறவு பண்டகசாலைக்கு மாதம் ஒருமுறை கண்காணிக்க வருவார். எனவே என்னை பற்றியும் நான் என்ன சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதை பற்றியும் அவருக்கு நன்றாக தெரியும்.
இந்நிலையில் என் சமூகத்தின் பெயரைச் சொல்லி எனது மனது புண்படும்படி பலமுறை பேசியுள்ளார். இது குறித்து, தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளரிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்தேன். துணைப்பதிவாளரும் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து, 2023 அக்.13ஆம் தேதி சிறப்பு மகாசபை கூட்டமானது, தூத்துக்குடி சிதம்பரநகர் கூட்டுறவு பண்டகசாலையில் நடைபெற்றது.
கொலை மிரட்டல்: அப்போது உறுப்பினர்களோடு நின்று பேசிக் கொண்டிருந்தபோது, செயல் ஆட்சியர் தனலெட்சுமி, "என்னை பற்றி துணைப்பதிவாளரிடம் புகார் சொல்லும் அளவுக்கு நீ என்ன பெரிய ஆளா, உன்னால் என்னை என்ன செய்ய முடியும்" என சாதிப் பெயரைக் குறிப்பிட்டு ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததால் எனக்கு மிகவும் அவமானமாகிவிட்டது.
நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?: தற்போது, இதுபோன்று நடந்து கொண்ட செயலாட்சியர் தனலட்சுமி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்க உறுப்பினர்களிடம் கலந்து பேசி தூத்துக்குடி சரக சங்க துணைப்பதிவாளரிடம் புகார் கொடுத்தோம். 5 மாதமாகியும் நடவடிக்கை இல்லை. அதைத் தொடர்ந்து கடந்த மே 28ஆம் தேதி சென்னையில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு புகார் அளித்தேன்.
அந்த புகாரின் பெயரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் செப்.2ஆம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. தற்போது, தனலட்சுமியை விசாரிப்பதாக கூறுகின்றார்கள். ஆனால் தற்போது வரை அவர் கைது செய்யப்படவில்லை. ஆகவே, என்னை சாதிபெயரை சொல்லி ஒருமையில் திட்டி, கொலை மிரட்டல் விடுத்த அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொள்கிறேன்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 3 சிறுவர்கள் பலி.. தேனியில் சோகம்!