புதுக்கோட்டை: ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில், அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நேற்று காலை 11 மணி முதல் பகல் 1.30 மணி வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சியில் உள்ள நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தை நடத்த நேற்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே, அறந்தாங்கி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அனுமதி பெற்ற நேரத்தில் கூட்டத்தை நடத்தாமல், முன்கூட்டியே நேற்று காலை 11 மணி முதல் 1.30 மணி வரை கூட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு, பாஜக பெண் நிர்வாகிகள் உள்ளிட்ட சில பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு தலா ஆயிரம் வீதம், 2 ஆயிரம் ரூபாயை ஓ.பன்னீர்செல்வம் வழங்கியதாக புகார் எழுந்தது.
மேலும், பணம் வழங்கும்போது பாஜக பெண் நிர்வாகியிடம், சண்டை போட்டுக் கொள்ளாமல் பிரித்துக்கொள்ள வேண்டும் என பேசியுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அறந்தாங்கி காவல் நிலையத்தில் இது தொடர்பாக தேர்தல் ஒளிப்பதிவு கண்காணிப்பு குழுவினர் புகார் அளித்தனர்.
இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்தது, அனுமதிக்கப்படாத நேரத்தில் கூட்டத்தை நடத்தியது உள்ளிட்ட காரணத்திற்காக, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மீது மூன்று பிரிவின் கீழ் (143, 283, 171) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், அந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலரையும், பின்னர் இந்த வழக்கில் சேர்க்கப் போவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்..ஏப்.2-ல் விசாரணை! - NCB SUMMONS DIRECTOR AMEER