சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரையில், 22 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளார். வட சென்னை பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட பலர் விசாரணை மையத்தில் உள்ளனர். தொடர்ந்து, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பலரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி, சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று (ஆக.09) பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர். மேலும், இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து, போராட்டத்தில், கலந்துகொண்ட 1000க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர், மறைந்த ஆம்ஸ்ட்ராங் உருவம் பதித்த முகமூடி அணிந்தும், படுகொலைக்கு நீதி கேட்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், தமிழக அரசுக்கு எதிராக நீதி வேண்டும் நீதி வேண்டும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு நீதி வேண்டும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், மேடையில், இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது, "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. திருமதி ஆம்ஸ்ட்ராங் அவருடைய மகளுடன் தொலைதூர நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் இறப்பிற்கும் பிறகு அவரை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் மரணத்தில் தொடர்ந்து அழுத்தம் தந்ததால் ஒவ்வொரு நபர்களாக போலீசார் கைது செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்சியிலிருந்து குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் அண்ணனுடன் இருந்த நபர்களே கொலைக்கு உறுதுணையாக உள்ளார்கள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. போலீசாரின் விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை, திட்டமிட்ட அரசியல் படுகொலை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் மீது பாய்ந்த வழக்கு: இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: அன்னிய மரங்களை அகற்ற 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆணை - mhc order to remove exotic trees