திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பிரச்சாரக் கூட்டத்திற்கு வெளி ஊரில் இருந்து அழைத்து வந்த பெண்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாகவும், பள்ளி குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்படுத்தியாகவும், தேர்தல் பறக்கும் படை அதிகாரி அளித்த புகாரின் பேரில், திமுக நிர்வாகிகள் இரண்டு பேர் மீது ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2024 நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக இந்திய முழுவதும் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பணிகளில் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தந்த கட்சி சார்பில் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 27ஆம் தேதி முடிந்தது.
அந்த வகையில், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி ஆலங்காயம் ஒன்றியம் பீமகுளம், காவலூர், ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வெள்ளகுட்டை கொத்தகோட்டை உள்ளிட்ட பகுதிகளில், திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, நிம்மியம்பட்டு பகுதியில் பிரச்சாரக் கூட்டத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்காக, நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளான சூர்யா மற்றும் பாரதி ஆகிய இருவரும், வெளி ஊரில் இருந்து வேன் மற்றும் மினி ஆட்டோக்களில் பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகளை அழைத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவின் கொடிகளை கைகளில் பிடித்தபடி, பள்ளி மாணவர்கள் அபாயமான முறையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிய வீடியோவும், கூட்டத்திற்கு வந்த பெண்களுக்கும், திமுக நிர்வாகிகள் சூர்யா மற்றும் பாரதி ஆகியோர் ரூ.200 பணம் கொடுத்துக் கொண்டிருந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கைகள் வலுத்தது.
இதையடுத்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஞானசேகர், தேர்தல் விதிமுறைகளை மீறி நிம்மியம்பட்டு பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு பணம் பட்டுவாடா செய்ததாகவும், பள்ளி குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியாகவும், திமுக நிர்வாகிகளான சூர்யா மற்றும் பாரதி ஆகிய இருவர் மீதும் ஆலங்காயம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில், சூர்யா மற்றும் பாரதி ஆகிய இருவரின் மீதும் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 171-ன் கீழ் ஆலங்காயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.