சென்னை: அதிமுகவில் கரூர் மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருபவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் கடந்த 2016 அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
முதல் புகார்: இந்த நிலையில், கரூர் வாங்கல் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷின் ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, தான் கூறும் நபர்களுக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தி ஆட்களை வைத்து தாக்கியதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பிரகாஷ் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் ஆறு பிரிவுகளில் கடந்த ஜூன் 22ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தனர்.
அடுத்த புகார்: இதனைத் தொடர்ந்து, கரூர் நகர் பகுதியில் அமைந்துள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், கடந்த ஜூன் 3ஆம் தேதி சந்தேகப்படும் வகையில் நான்கு பேர் வழங்கிய ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அதில், ஈரோடு சித்தார்த்தன், காஞ்சிபுரம் ரகு, கரூர் மாரியப்பன், செல்வராஜ் ஆகியோர் கூட்டாக மோசடியில் ஈடுபட்டு, தொழிலதிபர் பிரகாஷின் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய முற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதனால், மேலக்கரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர் ஜூன் 6-ம் தேதி கரூர் நகர காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் ஜூன் 9ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூன் 18ஆம் தேதி இந்த வழக்குகள் திடீரென சிபிசிஐடி வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி: இந்த வழக்கில் தனது பெயரை சேர்க்கக்கூடும் என தாமாக முன்வந்து, ஜூன் 12-ம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனுவினை எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிறைவுற்று ஜூன் 25ஆம் தேதி, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் ஜாமீன் மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 1ஆம் தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், இரண்டாவது முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் மற்றும் சாதாரண முன்ஜாமீன் மனு என இரண்டு ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
அதன் மீதான விசாரணை, ஜூலை 3, 4ஆம் தேதிகளில் நடைபெற்ற போது இடைக்கால முன் ஜாமீன் மனுவில் தனது தந்தை உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உள்ளதால், நான்கு நாட்கள் மட்டும் முன்ஜாமீன் வழங்குமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு நீதிபதியிடம் வலியுறுத்தியது.
சிபிசிஐடி வலை வீச்சு: ஆனால், விசாரணை முடிவில் இடைக்கால முன் ஜாமீன் மனுவும் ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 6ஆம் தேதி சாதாரண ஜாமீன் மனுவும் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ரூ.100 கோடி நில மோசடி வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 13 தனிப்படைகள் அமைத்து தமிழகம் தவிர பிற மாநிலங்களிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 13 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், ஜூலை 5ஆம் தேதி விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய தோட்டக்குறிச்சி செல்வராஜ், சேமங்கி கவுண்டம்புதூர் ஈஸ்வரமூர்த்தி, மணல்மேடு யுவராஜ் ஆகியோர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக ஜூலை 7ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் எம்.ஆர்.வி டிரஸ்ட் அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். ஜூலை 11ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினர் கவின் என்பவரது வீட்டில், விஜயபாஸ்கர் பதுங்கி உள்ள இடம் குறித்து சிபிசிஐடி போலீசார் திடீர் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் சிலரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் இறுதியாக தொலைபேசியில் பேசியது குறித்தும் விசாரணை நடத்தினர்.
அப்போது, விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், பென்டிரைவ் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை ஓரிரு நாட்களில் நடைபெற உள்ள நிலையில் இன்று காலை கேரளாவின் திருச்சூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பதுங்கி இருந்தபோது சிபிசிஐடி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் இன்று மாலைக்குள் ஆஜர் செய்யப்படலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 34 நாட்களுக்கு மேல் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் 11 பேரை கைது செய்ய, சிபிசிஐடி தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்; நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்!