சென்னை: 2024 - 25ஆம் கல்வியாண்டில், பொறியியல் படிப்பில் சேர்வதற்கு மே 6 ஆம் தேதி முதல் ஜூன் 6 ஆம் தேதி வரையும், ஜூன் 10,11 ஆகிய தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தனர். அப்போது 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் பதிவு செய்தனர். அவர்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்கள் கட்டணம் செலுத்தி உள்ளனர். மேலும், 1 லட்சத்து 93 ஆயிரத்து 853 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் சேர்வதற்கு கட்டணம் செலுத்திய 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 மாணவர்களுக்கு சமவாய்ப்பு எண் ஜூன் 12ஆம் தேதி வழங்கப்பட்டது. விளையாட்டுப் பிரிவில் உள்ள 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் செய்த 4 ஆயிரத்து 489 விளையாட்டு வீரர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
பொதுப்பிரிவு கலந்தாய்விற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள், தமிழ்நாடு பொறியியல் உதவி மையங்களில் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. தகுதியான மாணவர்களுக்கு ஜூலை 10ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை குறிவைத்து, தனியார் பொறியியல் கல்லூரிகள் நடத்தக்கூடிய மோசடிகள் ஆதாரங்களுடன் அம்பமாகியுள்ளது.
கல்வி ஆலோசகரின் ஆலோசனை: இதுகுறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறும்போது, "பொறியியல் படிப்பில் மாணவர்கள் கல்லூரியை தேர்வு செய்வதற்கு முன்பாக மாணவர்களும், பெற்றோர்களும், முதலில் கல்லூரியின் தேர்ச்சி சதவீதத்தை பார்க்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை வேலைக்கு எடுப்பதில்லை.
தேர்ச்சி பெற்றால் மட்டுமே வேலைக்கிடைக்கும் என்ற நிலையில், மாணவர்கள் எவ்வாறு தேர்ச்சிப்பெறுவார்கள் என எதிர்பார்க்க முடியும். மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு வழியில் ஏமாற்றப்பட்டு தவறான கல்லூரியில் சேர்கின்றனர். மாணவர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக பொறியியல் கல்லூரியின் தேர்ச்சி அறிக்கையை https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
200க்கு 199 கட்ஆப் பெற்ற மாணவர்கள், வெறும் 20 விழுக்காடு, 30 விழுக்காடு, 4 விழுக்காடு தேர்ச்சியை தரக்கூடிய தரம் குறைந்த கல்லூரிகளில் சேர்ந்து தங்கள் எதிர்காலத்தை வீணடித்து இருப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கக்கூடிய கல்லூரிகளின் தேர்ச்சி விவரங்களை பார்த்து, அதன் பிறகு சேரக்கூடிய கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்க வேண்டும்.
200க்கு, 190 முதல் 199.5 விழுக்காடு வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள், வெறும் நான்கு விழுக்காடு, 15 விழுக்காடு, 20 விழுக்காடு தேர்ச்சியை கொடுத்த தனியார் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்லூரி நல்ல கல்லூரியா என்பதை தெரியாமல் சேர்ந்துள்ளனர்.
ஆனால் அந்த கல்லூரிகளில் கட்டமைப்பு இருக்கிறதா, ஆசிரியர்கள் இருக்கிறார்களா, ஆய்வக வசதி இருக்கிறதா என்றெல்லாம் மாணவர்கள் பார்ப்பதே இல்லை. அந்த கல்லூரிகளில் வேலை வாய்ப்புகளுக்கான முகாம்களும் நடப்பது கிடையாது. தரம் இல்லாத கல்லூரிகளை தனியார் நிறுவனங்கள் கண்டு கொள்வது இல்லை.
இந்த முழுமையான விவரங்கள் அறியாமல், கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் சாதாரண கல்லூரிகளில் சேர்ந்து வாழ்வில் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஒவ்வொரு ஆண்டும் இருக்கிறது. இதுபோன்ற அவலங்கள் நடைபெறக்கூடாது. மாணவர்கள் கல்லூரிகள் பற்றி அறியாமல் தேர்வு செய்யக்கூடாது. மாநில முழுவதும் கிராமப்புறங்களில் போதிய விழிப்புணர்வை, கலந்தாய்வை நடத்தக்கூடிய தொழில்நுட்ப கல்வி இயக்குநரகமோ அல்லது தமிழக அரசோ செய்ய வேண்டும்" என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "பாரிஸ் ஒலிம்பிக்கில் அந்த நேரத்திற்காக காத்திருக்கிறேன்" - தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் பெருமிதம்!