திருப்பத்தூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் மாவட்டங்களில் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையை தடுக்கும் நோக்கில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் கார் மூலம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட வாடகை கார் ஓட்டுநர்கள், தேர்தல் பறக்கும் படையினர் மஞ்சள் நிற பதிவு எண் (YELLOW BOARD) கொண்ட கார்களை பயன்படுத்த வேண்டும், ஆனால், தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி, வெள்ளை நிற பதிவு எண் (WHITE BOARD) கொண்ட கார்களை பயன்படுத்துகின்றனர் என்று, வேலூர் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் இராமகிருஷ்ணனிடம் புகார் அளித்துள்ளனர்.
இ துகுறித்து வாடகை கார் ஓட்டுநர் சரத்குமார் கூறுகையில், “தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளை நிற பதிவு எண் (WHITE BOARD) கொண்ட கார்களை பயன்படுத்துகின்றனர் என்று கூறி, மாவட்ட ஆட்சியரிடம் முன்னதாக மனு அளித்திருந்தோம். தேர்தல் தேதி அறிவித்த நிலையில், வெள்ளை நிற பதிவு எண் கொண்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.
இதனால், கார்களுக்கு முறையாக எப்.சி மற்றும் வரிகளை செலுத்தி வரும் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. வெள்ளை நிற பதிவு எண் கொண்ட வாகனங்களைப் பறிமுதல் செய்து, மஞ்சள் நிற பதிவு எண் கொண்ட வாகனங்களை பயன்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
வாடகை கார் ஓட்டுநர்கள் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் புகார் அளித்த நிலையில், போக்குவரத்து ஆய்வாளர் வெங்கட்ராமனுக்கும், வாடகை கார் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜினாமா! என்ன காரணம்? ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகலா?