சென்னை: திருவொற்றியூர் பூங்காவனபுரம் பகுதியை சேர்ந்தவர் தாட்சாயணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர் திருவொற்றியூர் மண்டலம் மூன்றாவது வார்டில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அன்னை சிவகாமி நகர் பகுதியில் சுற்றித் திரியும் காளை மாடு ஒன்று கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக தாட்சாயணியிடம் அன்பு செலுத்தி வருகிறது.
தினந்தோறும் தன்னை சந்திக்க வரும் காளைக்கு பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார் தாட்சாயணி. தனக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் காளை மாட்டிற்கு 'கருப்பன்' என்று பெயர் வைத்து நான்காவது மகனாகவே பார்த்து வருகிறேன் என நெகிழ்ச்சி பொங்கக் கூறினார்.
உருவத்தில் பார்க்க பெரியதாக இருந்தாலும்,குழந்தை அம்மாவிடம் கொஞ்சி விளையாடுவது போல் நடந்து கொள்ளும் காளையைப் பார்க்க போது 'அம்மா பாசத்துல நம்மாளையே மிஞ்சிருவான் போல' என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
இதுபற்றி தாட்சாயணிடம் கேட்டபோது, "12 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த காளை மாடு இங்கு சுற்றித் திரிந்து வருகிறது. என்னிடம் கிடைக்கக்கூடிய பழங்கள் காய்கறிகளைக் இந்த காளை மாட்டிற்கு கொடுத்து வருகிறேன். வேலைக்கு வரவில்லை என்றாலும் கூட கருப்பனை தேடி வந்து அவனுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்துவிட்டுப் போவேன்.
பார்க்கத் தான் இவன் பயங்கரமாக இருக்கிறான், ஆனால் குழந்தை மனம் கொண்டவன். என்னைப் போன்ற மற்ற தூய்மைப் பணியாளரிடமும் இவன் அன்பு காட்டுவான். நாங்கள் பணி முடிந்து ஓய்வு எடுக்க ஒன்று கூடும்போது அவன் எங்கு இருந்தாலும் அந்த நேரத்திற்கு சரியாக வந்து விடுவான். இல்லை என்றால் எங்களை ஏதாவது ஒரு பகுதியில் தேடிக் கொண்டிருப்பான். கருப்பனை நான் காளை மாடாக பார்க்கவில்லை எனது நான்காவது மகனாகவே நான் பார்க்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் தாட்சாயணி.
மேலும் அங்கு இருந்த மற்ற தூய்மைப் பணியாளர்களும் கொஞ்சம் கூட பயப்படாமல், காளை மாட்டைக் கட்டியணைத்தும் முத்தமிட்டும் விளையாடிக் கொண்டு இருந்ததைப் பார்க்கும்போது சற்று ஆச்சர்யமாக இருந்தது.
திருவொற்றியூரில் சில மாதங்களுக்கு முன் ஓர் பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டி தரதரவென்று இழுத்துச் சென்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிகுள்ளாக்கியது.ஆனால் கருப்பன் காளை பார்க்கும்போது திருவொற்றியூர் பகுதி மக்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: எருமை தான் எனக்கு வாகனம்: மாற்றுத்திறனாளியின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?