திருச்சி: இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டல், வோடபோன் உள்ளிட்டவை, மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் 10 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தினர். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து பலரும் பிஎஸ்என்எல் மொபைல் சேவைக்கு மாற தொடங்கினர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பிஎஸ்என்எல் துணை பொது செயலாளர் விஜய பாஸ்கரன் கூறுகையில், "திருச்சி பிஎஸ்என்எல் மண்டலத்தில் 4 ஜி நெட்வொர்க் கொடுப்பதற்கு தற்பொழுது அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வருடம் டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 4ஜி சேவையை நிறுவனம் வழங்கும். டிசிஎஸ்(TCS) நிறுவனத்துடன் இணைந்து 4ஜி நெட்வொர்க் சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கிறோம். ஐந்து மாவட்டங்களில் உள்ளடக்கிய பிஎஸ்என்எல் திருச்சி மாவட்ட சேவையில் 715 இடங்களில் 4ஜி சேவை வழங்கப்படவுள்ளது.
விற்பனை 3 மடங்கு உயர்வு: ஜூலை மாதம் மூன்றாம் தேதி மற்ற செல்போன் நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியது, வாடிக்கையாளர்களுக்கு துயர செய்தியாக இருந்தது. ஆனால் அது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நல்ல நல்ல செய்தியாகும். கடந்த ஜூன் மாதம் 4,500 மொபைல் இணைப்புகள் மட்டுமே கொடுத்தோம்.
தற்பொழுது 25ஆம் தேதி வரை 15 ஆயிரத்து 500 பேருக்கு மொபைல் சேவையை வழங்கியுள்ளோம். இதனால் விற்பனை விகிதம் 3 மடங்கு அதிகரித்துள்ளது. ஏற்கனவே பிஎஸ்என்எல் நெட்வெர்க்கிலிருந்து மற்ற நெட்வொர்க் மாறும் சதவீதம் 6.29 அதிகரித்து இருந்தது. தற்போது 0.4 சதவீதம் ஆக குறைந்துள்ளது.
எண்ணிக்கையில் வைத்து பார்க்கும் பொழுது 4 ஆயிரம் பேர் மற்ற நெட்வொர்க்குக்கு மாறுபவர்கள் ஆகவும் 600 பேர் பிஎஸ்என்எல் சேவைக்கு வந்ததாகவும் இருந்தனர். தற்போது 4 ஆயிரத்து 77 பேர் பிஎஸ்என்எல் சேவைக்கு வந்துள்ளனர், ஆயிரத்து 689 பேர் வெளியில் சென்றுள்ளனர். 15 ஆயிரத்து 500 வாடிக்கையாளர்கள் தற்பொழுது பிஎஸ்என்எல் நெட்வொர்க் சேவைக்கு வந்துள்ளனர்" என்றார்.
விரைவில் 4ஜி: தொடர்ந்து பேசிய அவர், "2ஜி, 3ஜி சேவை வைத்திருக்கும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 4ஜி சேவைக்கு எந்த வித கட்டணம் இல்லாமல் மாறி தங்களது சிம் கார்டை பெற்றுக் கொள்ளலாம். திருச்சி மாவட்டத்தில் 300 இடங்களில் 4ஜி சேவை விரைவில் துவங்க உள்ளது.
மணப்பாறை கண்ணூத்து பகுதியில் 75 வருடமாக மொபைல் சேவை பயன்படுத்தப்படாத கிராமத்திற்க்கு கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை துவக்கி வைத்துள்ளோம். பச்சமலையில் 2 இடங்களில் 4ஜி சேவை கொடுக்கப்பட்டுள்ளது. துறையூரில் 16 பகுதியில் சேவை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
வால்பாறை, பச்சமலை, கொல்லிமலை, சபரிமலை உள்ளிட்ட இடங்களில் பிஎஸ்என்எல் சேவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற பெருமை உள்ளது. எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பிஎஸ்என்எல் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
பேரிடர் காலங்களிலும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு கரம் கொடுத்துள்ளது. மேலும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3ஜி, 4ஜி சேவை சரிவர கிடைக்காததால் வெறுப்புடன் இருந்தார்கள். இனிமேல் அது நிகழாது" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: தங்கப் புதையல் கிடைத்ததாக கைவரிசை! போலி நகைகளை விற்ற மோசடி கும்பல் கைது.. சிக்கியது எப்படி?