தருமபுரி: நல்லம்பள்ளி அருகே உள்ள தண்டுக்காரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தை - மாதம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். பிள்ளைகள் மூவரும் தண்டுக்காரம்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து, பின்பு ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை படித்தனர்.
இந்த குடும்பத்தில் இருந்து சந்தியா, ஹரி பிரசாத் ஆகியோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் படித்து வரும் நிலையில் தற்போது சூரிய பிரகாஷ் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
விவசாய குடும்பத்தை சேர்ந்த குழந்தை - மாதம்மாள் தம்பதியின் மூத்த மகள் சந்தியா, கடந்த 2019ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் தேர்ச்சி பெற்று, நீட் தேர்வு எழுதி, எம்பிபிஎஸ் படிப்பில் சேர முயற்சித்துள்ளார். ஆனால், வெற்றி கிடைக்காத காரணத்தால் தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தான் தமிழ்நாடு அரசு 7.5% இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது. இதனையறிந்த சந்தியா, மீண்டும் நீட் தேர்வுக்கு தயாராக திட்டமிட்டு, இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். கடந்த 2021ஆம் ஆண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்ந்திருக்கிறார்.
பின்னர் சந்தியாவின் தம்பி ஹரி பிரசாத், கடந்த 2021 -2022ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 600க்கு 500 பெற்று, ஓர் ஆண்டு நீட் தேர்வு பயிற்சி பெற்று கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தோ்வில் 434 மதிப்பெண்கள் பெற்று 7.5% இட ஒதுக்கீட்டில் சேலம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
விவசாயி குழந்தையின் மூன்றாவது மகன் கடந்த 2022- 2023ஆம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு பொதுத்தோ்வில் 600க்கு 520 மதிப்பெண்கள் பெற்று, ஓர் ஆண்டு நீட் பயிற்சி பெற்று, இந்த ஆண்டு நீட் தோ்வில் 540 மதிப்பெண்கள் பெற்று தனது அக்கா படிக்கும் கரூர் மருத்துவக் கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் அரசுப் பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருப்பது அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து மாணவர் சூரிய பிரகாஷ் கூறுகையில் "இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி கரூர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளேன். எனது சகோதரியும் கரூர் மருத்துவ கல்லூரியில் படிக்கிறார். எனது அண்ணன் சேலம் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். அக்கா, அண்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் குடும்பத்தினர் கூறியதால், அவர்கள் ஏற்படுத்திய தன்னம்பிக்கையின் காரணமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன்.
பள்ளி படிப்பிலேயே அடிப்படையை கற்றுக் கொடுத்ததால் நீட் தேர்வு எழுத சுலபமாக இருந்தது. தமிழக அரசின் 7.5% இட ஒதுக்கீட்டின் காரணமாக சுலபமாக வாய்ப்பு கிடைத்தது. நீட் தேர்வு நல்லது, ஒரு முறை படித்து விட்டு முடியவில்லை என்றாலும், மீண்டும் மீண்டும் முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும்" என்றார்.
இது குறித்து மாணவனின் தந்தை குழந்தை கூறியதாவது, "நான் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறேன். மகள் சந்தியா 2019-ல் பனிரெண்டாம் வகுப்பு முடித்தார். அப்போது தருமபுரியில் கோச்சிங் சென்டர் இல்லை. சென்னையில் சேர்த்தோம். மருத்துவ இடம் கிடைக்கவில்லை. தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் வேதியியல் பாடப்பிரிவில் சேர்த்தோம். இரண்டு ஆண்டுகள் முடிந்தது. மூன்றாவது வருடம் 7.5% இட ஒதுக்கீடு வந்த பிறகு தேர்வு எழுதி 310 மார்க் எடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.
நீட் தேர்வு என்பது ஒருவிதத்தில் சரியானது, 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் செல்லும் பொழுது ஒரு வருடத்தோட கனவு நனவாகாமல் சென்றுவிடும். நீட் தேர்வு இருப்பதால் மீண்டும் ஒருமுறை ஆசைப்படுகின்றனர். இன்னொரு முறை முயற்சி செய்து முடியும் அவர்களது கனவு நினைவாகும்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : “தமிழகத்திற்கு போதைப்பொருட்கள் அதிக அளவில் கடத்தப்படுகிறது”- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு! - RN Ravi on Drug awareness program