திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்தவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீரவநல்லூர் காவல் நிலையத்தில் இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு செல்லும்போது நாய் குறுக்கே வந்ததால் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த சுப்பையா திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிகப்பபட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்தார். தொடர்ந்து சுப்பையாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.
பின்னர் சுப்பையாவின் உடலில் இருந்து கண்கள், கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகள் எடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இதையடுத்து உடல் உறுப்புகளை தானம் செய்த உதவி ஆய்வாளர் சுப்பையா உடலுக்கு இன்று அரசு சார்பில் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலன் மற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: திருப்பத்தூரில் ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல எச்சம் பறிமுதல்.. 7 பேர் கைது.. தனிப்படையினர் அதிரடி!
தொடர்ந்து சுப்பையா உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுப்பையாவின் உடல் சொந்த ஊரான வி.கே.புரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர்கள் நேரில் சுப்பையா உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும் தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.25 லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தினரிடம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் காவல் உதவி ஆய்வாளரின் உடலுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.