சென்னை: சென்னையில் காதலன் வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஸ்ரீஷா மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஸ்ரீஷா (20), நேற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ராமாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
அரும்பாக்கம் தனியார் கல்லூரியில் படித்து வந்த ஸ்ரீஷா, ராமாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும் மணிகண்டன் (24) என்பவரை காதலித்து வந்துள்ளார். மணிகண்டன் தனியாக தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் மணிகண்டனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அப்போது ஸ்ரீஷா தான் மணிகண்டனை உடனிருந்து பார்த்துக் கொண்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், மணிகண்டனுடன் அவரது தாய் ரேவதி மற்றும் ஸ்ரீஷா மூன்று பேரும் ராமாபுரத்தில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டின் அறையில் இருந்த ஸ்ரீஷா மர்மமான முறையில் சடலமாக கிடந்துள்ளார். பதறிப்போன மணிகண்டன், ஸ்ரீஷாவை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தலைமறைவாகியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், தப்பிச் சென்ற மணிகண்டனைப் பிடித்து கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் ஸ்ரீஷா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஆனால், ஸ்ரீஷாவுக்கு உயிர் இருப்பதாக நினைத்த மணிகண்டன், அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிய வந்துள்ளது. மேற்கொண்டு நடத்தப்பட்டு வரும் விசாரணையில்தான், ஸ்ரீஷா எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? முழு பின்னணி என்ன என்பதான தகவல்கள் தெரிய வரும்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.
இதையும் படிங்க: கேரள தம்பதியின் சதுரங்க வேட்டை.. இரிடியம் மோசடியில் 25 லட்சம் அபேஸ்.. போலீஸ் விசாரணையில் பகீர்!