தூத்துக்குடி: மாவட்டம், கோவில்பட்டி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கட்டிட தொழிலாளிகளான முருகன்-பாலசுந்தரி தம்பதி. இந்த தம்பதிக்கு மணிகண்டன், கருப்பசாமி என்ற இரண்டு மகன்கள். மணிகண்டன் அங்குள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். அதே பள்ளியில் கருப்பசாமி 5ம் வகுப்பு படித்து வந்தான்.
நகைக்காக கொலையா?
கருப்பசாமிக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. திங்கள்கிழமை காலையில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட, சகோதரன் பள்ளிக்கு சென்று விட கருப்பசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த கருப்பசாமி மாயமாகியுள்ளார். மாயமான சிறுவன் கருப்பசாமி கழுத்தில் ஒன்றரை பவுன் தங்க செயின் மற்றும் கையில் 1 கிராம் தங்க மோதிரம் அணிந்து இருந்தாக கூறப்படுகிறது.
அலசப்படும் சிசிடிவி
இதையடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை என்றதும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்து சிறுவனை தேடி பார்த்தனர். அங்குள்ள வீடுகளில் தேடினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து பார்த்தனர். இருந்தும் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில், நேற்று காலையில் சிறுவன் வீடு அருகே இருந்த பக்கத்து வீட்டு மாடியில் மூச்சுப் பேச்சில்லாமல் மயக்கம் அடைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் சிறுவன் இறந்து விட்டதாகவும், இறந்து பல மணி நேரம் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் கோவில்பட்டி டி.எஸ்பி. ஜெகநாதன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று போலீசார் வீடு, வீடாக சோதனை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள மாடி, குடிநீர் தொட்டிகள் போன்றவற்றிலும் சோதனை செய்தனர். அது மட்டுமின்றி நேற்று அதிகாலை 4 மணி வரை அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அதன் பின்னர் தான் உடலை வீசி சென்று இருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
மாடியில் எப்படி உடல் வந்தது
சிறுவனின் சடலம் எடுக்கப்பட்ட மாடி வீடு என்பது சிறுவனின் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு. அந்த வீட்டின் பகுதியில் உள்ள சந்து வழியாக உடலை எடுத்து வந்து வீசி சென்று இருக்கலாம் என்ற சந்தேகமும் ஏற்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவனின் உடலில் எவ்வித காயமும் இல்லை, ஆனால் இறந்து பல மணி நேரம் இருக்கலாம். உடற்கூறு ஆய்விற்கு பின்னர் தான் எப்படி இருந்திருக்கலாம் என்பது தெரியவரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நேற்று காலையில் 9:20 மணிக்கு டிவி ரிமோட் ஒன்றை கருப்பசாமியின் தாயார் பாலசுந்தரி அருகில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டரிடம் வாங்கி கருப்புசாமியிடம் கொடுத்துவிட்டு வேலைக்குச் சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி, சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் கருப்பசாமி திங்கள்கிழமை காலை 8:30 மணிக்கு அருகில் வசிக்கக்கூடிய தன்னுடைய பாட்டிக்கு போன் செய்து அம்மா வேலைக்கு செல்கிறார், வீட்டிற்கு வாருங்கள் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. அவருடைய பாட்டி 10 மணிக்கு வந்து பார்த்தபோது சிறுவன் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
காரணத்தை அலசும் போலீசார்
அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியில் நேற்று காலையில் இருந்து சிறுவன் வெளியே சென்றதற்கான எவ்வித அறிகுறியும் இல்லை. ஆகையால் சிறுவன் அப்பகுதியில் உள்ள ஏதோ ஒரு வீட்டில் மறைத்து வைத்து அல்லது ஏதோ ஒரு பகுதியில் மறைத்து வைத்து கொலை செய்யப்பட்ட பின்னர் உடலைப் போட்டுச் சென்றுள்ளனரா? உண்மையில் நகைக்காக தான் இந்த சம்பவம் நடைபெற்றதா? அல்லது வேற ஏதும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
அதுமட்டுமல்ல சிறுவன் கொலை செய்யப்பட்ட வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்ததாகவும், மேலும், ஓரினச்சேர்க்கைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாக்கியுள்ளது.
நேற்று காலையில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, அந்த பகுதிக்கு சம்பந்தமில்லாத பலரும் வந்து செல்கின்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. அதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.