மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மேலமங்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் பாலசுப்பிரமணியன். இவர் நெய்க்குப்பையில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இவருடைய மகன் கிஷோர். ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கிஷோர் மிகுந்த வயிற்று வலியால் துடித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவரின் உறவினர்கள் நேற்று (ஜன.28) இரவு மயிலாடுதுறையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான அருண்பிரியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிஷோரை கொண்டு வந்து சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குடல் வால் (அப்பெண்டிக்ஸ்) உள்ளதாகவும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்ததன் பேரில், இன்று (ஜன.29) காலை 9.45 மணிக்கு சிறுவன் கிஷோருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கிஷோர் மயக்க நிலையில் இருந்துள்ளார். அப்போது அவரின் உடலில் பல்ஸ் எதுவும் காண்பிக்கவில்லை எனவும் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் முறையாக பதிலளிக்காமல் ரமணா பட பாணியில் 2 மணி நேரம் சிகிச்சை மேற்கொண்டதாகவும், சிறுவனுக்கு ஆபரேஷன் செய்யப்பட்ட பிறகு மருத்துவர் ஒருவரும் சிறுவனை கவனிக்கவில்லை என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
அதைத் தொடர்ந்து, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வந்த மருத்துவர் சிறுவனை சோதனை செய்து பார்த்துவிட்டு ஆக்சிஜன் பத்தாமல் இருப்பதாகக் கூறியதாகவும், அதன் பின்னர் ஆக்சிஜன் சிலிண்டரை மருத்துவமனையில் ஊழியர்கள் வெகு நேரமாகத் தேடியதாகவும் குற்றம் சாட்டிய உறவினர்கள், பின்னர் சிறுவன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டதாகக் கூறினர். அதையடுத்து, 12 வயது சிறுவனுக்கு வயதைக் கருத்தில் கொள்ளாமல் உடல் எடையை வைத்து அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
மேலும், தற்போது சர்வ சாதாரணமாக அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்யப்படும் நிலையில், தவறான சிகிச்சை செய்து சிறுவன் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவமனையை சீல் வைக்க வேண்டும் எனவும் உரிய விசாரணை செய்து மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, கண்ணாரத்தெரு முக்கூட்டு நான்கு சாலைகள் சந்திக்கும் பகுதியில் சிறுவனின் உடலை பெறாமல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து போலீசார் மற்றும் வட்டாட்சியர் சபிதா தேவி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குடல் வால்வு ஆபரேஷன் சர்வ சாதாரணமாக செய்யப்படும் நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ஹோட்டலில் இளம் பெண் சுட்டுக் கொலை.. துப்பாக்கியுடன் பிடிபட்ட ஆண் நண்பர்.. பூனாவில் பரபரப்பு..!