சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரம் பகுதியில் குருவம்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. இந்த உயிரியல் பூங்கா அருகே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் வழக்கம் போல் இன்று காலை பள்ளி திறக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வருகை புரிந்து கொண்டு இருந்தனர். அப்போது பள்ளிக்கு இ-மெயிலில் மூலம் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம், உடனே சேலம் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை: இதனையடுத்து உடனே சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து விசாரித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் அழைத்துவரப்பட்டு அவர்கள் சோதனை செய்து வருகின்றனர். இதற்கிடையே பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவ மாணவிகளைப் பத்திரமாக அவரவர் பகுதிகளுக்கு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
3 மாவட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: இதே போல ஈரோடு, திருச்சி மாவட்டங்களில் உள்ள இதே நிறுவனத்திற்கு சொந்தமான பள்ளிகளுக்கும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எதற்காக இது போன்று மிரட்டல் விடுக்கப்பட்டது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவக் கனவை நனவாக்கிய தையல் மெஷின்.. “நீட் தேர்வு கடினமில்லை”.. எம்பிபிஎஸ் மாணவரின் முதல் உச்சம்!