சென்னை: விமானங்கள் மற்றும் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போன்ற இமெயில் வருவதும், அவற்றை சோதனை செய்யும் போது வந்த தகவல் புரளி என்பது தெரிய வருவதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், நேற்று 3 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த இமெயிலால் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது, சென்னை விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு இமெயில் வந்துள்ளது. அதில், சென்னை விமான நிலையத்திற்கு இலங்கையில் இருந்து வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், சிலிகுரியில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், டெல்லியில் இருந்து வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 3 விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாகவும், அவை வெடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்துள்ளது. அதே போன்ற இமெயில்கள் அந்த மூன்று விமான நிறுவனங்களுக்கும் சென்றுள்ளது
அதனால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள், விமான பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோர் தங்களுடைய பணிகளை துரிதமாக தொடங்க தயாராக இருந்தனர். அதே நேரத்தில் 3 விமானங்கள் சென்னைக்கு வந்து வானில் பறந்து கொண்டு இருந்தன.
இதையும் படிங்க: பீதி கிளப்பும் வெடிகுண்டு புரளிகள்! அலோகலப்படும் விமான நிலையங்கள்
இந்த நிலையில், இலங்கையிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஓடுபாதை அருகே தயாராக இருந்த சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், விமானத்துக்குள் ஏறி பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால், விமானத்திற்குள் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
அதேபோல், மற்ற இரண்டு விமானங்களும் உள்நாட்டு விமான நிலையத்தில் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. அந்த விமானங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைகளை நடத்தினர். அவைகளிலும் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை எனவும், எனவே இது புரளி என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குகள் பதிவு செய்து, வெடிகுண்டு புரளிகளைக் கிளப்பிவிட்ட மர்ம கும்பலை இமெயிலை அடிப்படையாகக் கொண்டு தேடி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்