நீலகிரி: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் சமீப நாட்களாகச் சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு, குடிநீர் தேடி வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில், தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளதால் சமவெளிப் பகுதியில் இருந்து யானைகள் கோத்தகிரி சாலைக்கு வரத் தொடங்கிளுள்ளது. இரவு நேரத்தில் வரும் யானைக்கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனத்தை பின்னோக்கி இயக்கி செல்லும் சூழல் ஏற்பட்டது.குறிப்பாக, பெரியார் நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை கரடி எதிரெதிரே நடமாடிய சிசிடிவி (CCTV) காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றித் திரியும் வனவிலங்குகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,கிளப் ரோடு பகுதியில் நேற்று இரவு நேரத்தில் சிறுத்தை ஒன்று சாலையில் உலா வந்துள்ளது.
இதனை கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்த நிலையில், சிறிது நேரம் சாலையில் உலா வந்த சிறுத்தை வாகன முகப்பு வெளிச்சத்தைக் கண்டவுடன் மின்னல் வேகத்தில் அருகில் இருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் ஓடியது. இதனைத் தொடர்ந்து, இரவு நேரங்களில் உலா வரும் வனவிலங்குகளை வனத்துறையினர் கண்காணித்து பொதுமக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் அப்பகுதியில் தனியாகப் பொதுமக்கள் செல்ல வேண்டாம் சாலையில் வாகன ஓட்டுநர்கள் எச்சரிக்கையாகச் செல்ல வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது சாலையில் சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.