கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “சட்டப் பேரவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து நடைபெறும் பணிகள் வேகமாக நடக்கின்றது.
கோவை இராமநாதபுரம் பகுதி மக்களுக்கு குடி நீர், ஏடிஎம் அமைக்க விடாமல் உள்ளாட்சி பிரதிநிதிகள் இடையூறு செய்கின்றனர். மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றோம். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து குடி நீர், ஏடிஎம் அமைக்க உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் மீதான தாக்குதல், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு இருப்பதை காட்டுகிறது.
அரசு மருத்துவர்கள் போதிய வசதிகள் இன்றி பணியில் இருக்கின்றனர். அரசு மருத்துவருக்கு இந்த மாதிரி நடந்து இருப்பதை சாதாரணமாக பார்க்க கூடாது. மருத்துவ ஊழியர்களின் பணிசுமைகளை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். அரசு மருத்துவரின் மீதான தாக்குதலை கண்டிக்கின்றோம். இந்த சம்பவம் தனிபட்ட சம்பவம் அல்ல, அரசாங்கத்தின் தோல்வி.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் ரூ.18 லட்சம் முறைகேடு..அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
கமல் ஏன் உலகநாயகன் பட்டத்தை துறந்தார் என தெரியவில்லை. ஆனால் அமரன் படத்தை எடுத்தற்காக அவருக்கு எனது நன்றி. மதத்தின் பெயரால் பிரிவினை உருவாக்க நினைப்பவர்கள் இந்த படத்தை சர்ச்சையாக மாற்றுகின்றனர். அமரன் படத்தில் எந்த இடத்திலும் பொய்யாக சித்தரிப்பதாக தெரியவில்லை. பள்ளி மாணவர்களுக்கு இந்த படத்தை போட்டுகாட்டுவதில் என்ன தவறு உள்ளது?
கோவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்ட நிகழ்வில் தவெக கட்சி வண்ணத்துடன் இருந்த மேஜை விரிப்பை அமைச்சர் அகற்ற கூறியுள்ளார். சில நாள்களுக்கு முன்னர், நாங்கள அந்த விரிப்பில் அமர்ந்து தைரியமாக பேசினோம். ஆனால் பகுத்தறிவு பேசும் கட்சி மேஜை விரிப்பை எடுக்க சொல்லி இருக்கிறது.
நாட்டிற்கு உழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான அங்கீகாரத்தை பாஜக தவறாமல் கொடுத்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த பிரதமர் மோடி 'பிரதமர் வீட்டு வசதி திட்டம் பிரதமர் விவசாயிகள் திட்டம் என்றுதான் வைப்பாரே தவிர அவர் பெயரை வைக்கவில்லை. இது எல்லாம் தான் பாஜகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் இடையிலான வித்தியாசம்,” என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்