திருநெல்வேலி: நாடு முழுவதும் 7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதற்காக அனைத்து கட்சிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் முடிந்து, வேட்புமனு பரிசீலனையும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் தனது தேர்தல் பரப்புரையை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் துவக்கியுள்ளார். அதற்காகத் திருநெல்வேலியில் உள்ள டவுன் ஈசான விநாயகர் கோயிலில் வழிபாடுகளை மேற்கொண்டு, பின்னர் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார்.
அப்போது, மேளதாளம் கட்சியினரின் முழக்கங்கள் என ஆரவாரத்துடன் தேர்தல் பரப்புரையைத் தொடங்கி நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி டவுன் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக அனைவருக்கும் பொதுவானது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலைப்பாட்டோடு பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும்" என்று கூறி வாக்குகளைச் சேகரித்தார்.
மேலும், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் பாடல்களை ஒலித்துக் கொண்டே தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். நயினார் நாகேந்திரன் தற்போது பாஜகவில் போட்டியிட்டாலும், ஆரம்பத்தில் அவர் ஒரு தீவிர அதிமுக விசுவாசி, எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் பணியாற்றியவர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அமைச்சரவையில் 5 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவர். அதிமுகவில் மாவட்டச் செயலாளர் உட்பட பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
அதுமட்டுமின்றி, மாவட்டம் முழுவதும் அதிமுக நிர்வாகிகளுடன் தற்போது வரை நட்பு வட்டாரத்தில் இருந்து வருகிறார். கடந்த 2016 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பாஜகவில் இணைந்து, கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் வெற்றி வாகை சூடினார். ஆனால், அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது.
ஆகையால், அதிமுகவின் வாக்குகளும் அவரது வெற்றிக்குக் காரணமாக அமைந்தது. ஆனால் இந்த முறை அதிமுக - பாஜக கூட்டணியில் இல்லை. இதனால் நயினார் நாகேந்திரன் வெற்றி பாதிக்கப்படும் எனப் பலரும் கருதி வரும் நிலையில், கூட்டணி இல்லாவிட்டாலும் அதிமுகவின் வாக்குகளைப் பெற நயினார் நாகேந்திரன் மறைமுகமாக முயற்சியில் ஈடுபடுவதாகப் பேசப்படுகிறது. குறிப்பாகப் பழைய பழக்க வழக்கங்களைப் பயன்படுத்தி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் ஆதரவு திரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நயினார், தேர்தல் பிரச்சாரங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவேன் எனத் தெரிவித்திருந்தார். இதனால், அதிமுக வட்டாரத்தில் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில்தான், எம்.ஜி.ஆர் பாடலை ஒலிக்க விட்டிருப்பது அதிமுக வாக்குகளைக் கவர்வதற்கே என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.