சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகே மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் பெரம்பூர் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது, அவரது உடலுக்கு ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பை யாராலும் நிரப்ப முடியாது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்கள் கொலைகள் அதிகரித்துள்ளன. பல அராஜகத்திற்கும், குற்றச்செயல்கள் நடைபெறும் இடமாக வட சென்னை மாறிக்கொண்டு இருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலையில் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. சேலத்தில் அதிமுக நிர்வாகி வெட்டி கொல்லப்பட்டுள்ளார். கடலூரில் பாமக நிர்வாகியை வெட்டியுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலையில் அரசியல் பின்புலம் உள்ளது. தமிழகத்தில் போலி சரக்கு, போலி சரண்டர்கள் அதிகரித்துள்ளன. ஆம்ஸ்ட்ராங்கின் இழப்பு சிந்தித்துகூட பார்க்க முடியாத ஒன்று” இவ்வாறு அவர் கூறினார்.
இதனையடுத்து, அவர் பேட்டி அளிக்கும் போது அருகில் இருந்த பெண் ஒருவர், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு தீர்வு காண வேண்டும் என கதறி அழுதார். அதனைப் பார்த்த தமிழிசை சௌந்தரராஜன், அவரை கட்டிப்பிடித்து அழுதார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ வசம் ஒப்படையுங்கள் - தமிழக அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்