புதுக்கோட்டை: புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம் திலகர் திடலில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, விளக்க உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜக கூட்டணிக்கு 80 லட்சம் வாக்குகளையும், பாஜகவிற்கு 50 லட்சம் வாக்குகளையும் அளித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
திமுக அந்த காலத்தில் இருந்தே பாஜக தமிழகத்தில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக பொய் பிரச்சாரங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் பாரதிய ஜனதா கட்சி மதவாத கட்சி, வடநாட்டு கட்சி, மேல் ஜாதி கட்சி என்று சொல்லி மக்களை பாரதிய ஜனதா கட்சி பக்கம் திரும்பாமல் கவனமாக பார்த்துக் கொண்டனர்.
ஏழு முறை இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் ஒரு தமிழர் என்ற முறையில் நமக்கெல்லாம் அது பெருமை. திமுகவினருக்கு அது பெருமை கிடையாது. ஏனென்றால் அவர்களை விட தமிழர்கள் யாரும் மேலே வந்து விடக்கூடாது என்பதில் அந்த காலத்தில் இருந்தே தெளிவாக உள்ளனர்.
ஏனென்றால் ஜி.கே.மூப்பனாரை பிரதமராக வரவிடாமல் தடுத்ததும், அப்துல் கலாம் ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரவு தெரிவிக்காததும் திமுகதான். அதே போல தான் நிதி அமைச்சரை கொச்சைப்படுத்துவது தமிழர்களை அவமானப்படுத்துவதாக அமைந்துள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகம் முதலமைச்சர் கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காரணம் தெரிவித்தார். தற்போது பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரை இல்லை என்று தெரிவித்து, கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் பெயரை சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஏனென்றால் பாஜக தமிழர்களுக்கு எதிரானது என்று கூறி 2026 ஆட்சியை பிடிப்பதற்காக திமுக திட்டம் செய்து வருகிறது. கடந்த காலத்தில் விவசாயிகளுக்கு எதிராக மீத்தேன் திட்டங்கள், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையெழுத்திட்டது அப்போது துணை முதல்வராக இருந்த இதே திமுக முதல்வர் ஸ்டாலின் தான்.
தற்பொழுது கர்நாடகத்தில் வெள்ளம் வரவில்லை என்றால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்திருக்காது. இப்பொழுது காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், ஒரு சொட்டு தண்ணீரை கூட கர்நாடகா அரசு கொடுக்கவில்லை. சமூக நீதி பேசும் திமுக அரசு வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் நடைபெற்று ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது எங்கே போனது சமூகநீதி? என கேள்வி எழுப்பினார்.
மேலும் கடந்த முறை தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு எம்பி-ஐ கூட தராத தமிழகத்திற்கு மத்திய அரசாங்கம் இவ்வளவு நிதியை கொடுத்துள்ளது என்றால் இது தமிழகத்தை புறக்கணிக்கும் அரசாங்கமா என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
வேலைவாய்ப்பு கொடுக்கக்கூடிய திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி எங்களுடைய திட்டங்கள் என்று கூறி வருகிறது. பாஜக அளிக்கிறது என்று கூறுகிறார்கள். நீங்கள் திட்டம் தான் போட முடியும், ஆனா எந்த காலத்திலும் காங்கிரஸ் கட்சி இனி இந்தியாவை ஆள முடியாது. இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர முடியாது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆடி அமாவாசை Vs மற்ற அமாவாசை.. சிறப்புகளும் ஆன்மீகமும் என்ன?