சேலம்: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி ஏற்பாட்டில், பாஜக எஸ்டி பிரிவு மாநிலச் செயலாளர் கிருஷ்ணகிரி பாப்பண்ணா தலைமையில் 30க்கும் மேற்பட்டோர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
திமுக, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் கேபிஎம்.சதீஷ்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவி.ராஜேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.
இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி.முனுசாமி பேசுகையில், “பாஜக எஸ்டி அணியின் மாநிலச் செயலாளர் பாபண்ணா மற்றும் தனித் தொகுதிக்கு உட்பட்ட 6 ஊராட்சி மன்றத் தலைவர்கள், தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
மேலும், ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நல்ல அரசியல் அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், நிச்சயமாக மெகா கூட்டணி அமைத்து, தேர்தல் களத்தில் வெற்றி பெறுவோம். கூட்டணி குறித்த நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக அதிமுக தெரிவிக்கும்” என்றார்.
டிடிவி தினகரன், ஓபிஎஸ் பற்றிய விமர்சனம் குறித்த கேள்விக்கு, தரம் தாழ்ந்த மனிதரைப் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை என கூறினர். ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் கூற்றின்படி சொன்னால், இரண்டு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா போட்ட பிச்சையில் பொதுவாழ்வில் இந்த இடத்திற்கு வந்தவர்.
இந்த இடத்திற்கு வந்த பிறகும், சொந்த புத்தியில்லாமல் இது போன்ற கருத்துக்களைக் கூறி வருகிறார். உச்ச நீதிமன்றத்திலிருந்து அனைத்து நீதிமன்றங்களும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம்தான் இரட்டை இலை சின்னம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்புக்கு பிறகும் உளறிக் கொண்டிருக்கிறார் என்றால், யாரை ஏமாற்ற நினைக்கிறார் என்பது அவருக்குத்தான் தெரியும்' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: வாணியம்பாடி அருகே திருமணமான 6 மாதத்தில் பெண் தற்கொலை.. நடந்தது என்ன?