சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, ஏப்ரல் 6ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.4 கோடி பணத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பணத்தைக் கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூவரையும் கைது செய்து, அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அந்த பணம் சென்னையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கைமாற்றப்பட்டு நெல்லை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும், இது நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் எனவும் வாக்குமூலம் அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு பாஜக நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதுவரை 15 நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது, இந்த ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை செய்ய முடிவு செய்து, அவருக்கு சிபிசிஐடி போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், இன்று சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் எஸ்.ஆர்.சேகர், பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் உடன் ஆஜராகியுள்ளார். இதையடுத்து, தனி அறையில் வைத்து எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, எஸ்.ஆர்.சேகரை கோவை இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை செய்து வாக்குமூலங்களை வீடியோவாக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து, அதனடிப்படையில் சம்மன் அனுப்பப்பட்டது.
அதையடுத்து, எஸ்.ஆர்.சேகர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், "தன்னிடம் இருந்து செல்போனை பறித்து தன்னை துன்புறுத்தக்கூடாது எனவும், அடிக்கடி சம்மன் அளித்து தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது" எனவும் குறிப்பிட்டிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், "எஸ்.ஆர்.சேகரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்யக்கூடாது எனவும், ஆனால் அவர் ஜூலை 11ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்" எனவும் அறிவுறுத்தியது.
அந்த உத்தரவின் அடிப்படையில், இன்று சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ள எஸ்.ஆர்.சேகரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரிடம் நடத்தப்படும் விசாரணையின் அடிப்படையில் தான், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிபிசிஐடி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருணாநிதி குறித்து அவதூறு; குற்றாலத்தில் சாட்டை துரைமுருகன் கைது - பின்னணி என்ன?