வேலூர்: தமிழகத்தில் பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெறுவதற்கு சாத்தியம் உள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர், திருநெல்வேலி, வேலூர், தருமபுரி, தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளி மலையில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவையில் பாஜக கட்டாயம் வெல்லும். எதிர்க்கட்சிகாரர்களே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தான் வெல்வார் என்று கூறுகின்றனர். அவர், கோவையில் வெற்றி பெற்று மத்திய அமைச்சரானால் அது மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அண்ணாமலைக்கு பிரகாசமான வாய்ப்பு: புதுப்புது திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வருவார். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பல வளர்ச்சி திட்டங்களை கொண்டு வருவார். மேலும், கோவை தொகுதியில் தேர்தல் நேரத்தில் 500 நாட்களில் நிறைவேற்ற கூடிய நூறு வாக்குறுதிகளை கொடுத்திருந்தோம். ஆனால், எதிர்கட்சிகள் மக்களைக் கவரும் வகையில், தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. எனவே, குறைந்தது 5 லட்சம் வாக்குகள் பெற்று அண்ணாமலை வெற்றி பெறுவார்.
6 தொகுதிகளில் பாஜகவின் நிலை: தமிழகத்தில் பாஜக கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெறுவதற்கு சாத்தியம் உள்ளது. குறிப்பாக, கோயம்புத்தூர், திருநெல்வேலி, வேலூர், தருமபுரி, தேனி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல் மிகப்பெரிய வெற்றியை பாஜக பெறவுள்ளது. பாஜக 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என கருத்து கணிப்புகள் கூறுகிறது. ஊடகத்தில் அரசியல் செய்து ஆட்சிக்கு வரலாம் என்று இந்தியா கூட்டணி நினைக்கின்றனர்.
தென் இந்தியாவில் கேரளா, தமிழநாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களை வெல்லும். அந்தமான், புதுச்சேரி, கோவா உள்ளிட்ட 4 இடங்களிலும் பாஜக வெல்லும். காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்கட்சியாக கூட அமர வைக்க மக்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் 20 சதவிகிதத்திற்கும் கூடுதலான வாக்குகளை பாஜக பெறும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் சரண்! மீண்டும் பொறுப்பேற்ற சுனிதா கெஜ்ரிவால்! - Arvind Kejriwal Surrendered