சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா கடந்த 2018ஆம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்துக்களை எக்ஸ் தளத்தில் பதிவு செய்ததாக பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க நிர்வாகிகள், தந்தை பெரியர் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது.
இந்த புகாரில் கனிமொழிக்கு எதிரான புகாரில் ஈரோடு நகர காவல்துறையும், பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் காவல்துறையும் ஹெச். ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது. பின், காவல் நிலையத்தில் தன்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற கருத்துக்கு ஆதாரங்கள் இல்லை. எம்பி கனிமொழி மீதான கருத்துக்கு நேரடியாக அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என ஹெச். ராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: தஞ்சை கிறிஸ்தவ பள்ளிக்கூட விடுதியில் மாணவி தற்கொலை வழக்கு; பள்ளி நிர்வாகி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
இந்நிலையில், வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. ஹெச். ராஜா கருத்து பதிவு செய்யவில்லை என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. எனவே, இரண்டு வழக்கில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை 10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஹெச். ராஜா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் ஒரு மாதம் தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக் கோரி ஹெச். ராஜா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.