கோயம்புத்தூர்: 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள மோடி தலைமையிலான பாஜகவை எதிர்த்து, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியாக இணைந்து தேர்தல் பணியாற்றி வருகின்றன.
தமிழகத்தில் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையிலும், அதிமுக பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன. இதனிடையே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் “எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை. அவரை கண்டா வரச் சொல்லுங்க” எனும் போஸ்டர்களை அதிமுகவும், “கண்டா வரச் சொல்லுங்க.. கூட்டணி வைக்க ஆட்கள் தேவை” எனப் போஸ்டர்களை ஒட்டியிருப்பதாக தெரியவருகிறது.
அதேபோல, “தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக் கூட்டணியை களத்திலேயே காணவில்லை, கண்டா வர சொல்லுங்க” என அதிமுகவை கிண்டல் செய்து திமுகவும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றன.
இந்த போஸ்டர் யுத்தத்தில் தற்போது பாஜகவும் களமிறங்கி உள்ளது. கோயம்புத்தூர் சுந்தராபுரம் பகுதி சாரதா மில் சாலையில், “வளர்ச்சி அரசியலா? வாரிசு அரசியலா?” என காவி மற்றும் கருப்பு நிறங்களுடன் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் பிரதமர் மோடியின் புகைப்படமும், வாரிசு அரசியலா என்ற வாசகத்தையும் குறிப்பிட்டு, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் குடும்பத்தினர்களான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் திமுக கருணாநிதியின் குடும்பத்தினர்களான மு.க. ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
மேலும், காங்கிரஸ் கட்சியின் சின்னமான 'கை' சின்னத்தையும், திமுக கட்சியின் சின்னமான 'உதயசூரியன்' சின்னத்தையும் மறுப்பது போல புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. கேள்வி பதில் வடிவில் அமைந்துள்ள இந்த போஸ்டரில் வளர்ச்சி அரசியலா? வாரிசு அரசியலா என்பதற்கு பாஜக கட்சியின் சின்னமான “தாமரையே விடை” என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன.
முன்னதாக, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும், "எம்பியை காணவில்லை.. கண்டா வர சொல்லுங்க" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி நூதன பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக திருச்சியில், எம்பியை காணவில்லை என்ற போஸ்டர் விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட எம்.பி திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் என்ன அமெரிக்காவிலா இருக்கிறேன், இதே திருச்சியில்தான் இருக்கேன்.
யார் என்னை பார்க்க வேண்டுமோ, அவர்கள் நேரில் வாருங்கள்" என நகைச்சுவையாக பதிலளித்தார். இதேபோல, மதுரையில் ஒட்டப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரைக் காணவில்லை என்ற போஸ்டர் முன்பு நின்று, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் புகைப்படம் எடுத்ததோடு, அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு "I am waiting" என குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பான புகைப்படமும் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'திமுகவால் மத்தியில் ஆட்சி மாற்றம்..நரேந்திர மோடி சிறைக்கு செல்வது உறுதி' - ஆ.ராசா பரபரப்பு பேச்சு