சென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இரண்டு நபர்கள் கையில் பையை வைத்துக்கொண்டு வேகமாக சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து, போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வைத்திருந்த பையில் நான்கு கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்து ஓட்டேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை அடுத்து, ஓட்டேரி காவல் ஆய்வாளர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் குணசேகரன் என்பவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி தங்களிடம் விற்பனை செய்வதற்காக கொடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, பாஜக மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்டச் செயலாளர் குணசேகரன் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவர் வீட்டில் இருந்த கஞ்சா மற்றும் எடை மெஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்னாள் அரசு ஓட்டுநருக்கு 50 ரூபாய் அபராதம்; சென்னை ஐகோர்ட் நூதன தண்டனை ஏன் தெரியுமா?