திருநெல்வேலி: நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தற்போது வரை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத சூழலில், பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளை முன்னதாகவே தொடங்கிவிட்டனர். வழக்கம்போல் தேதி அறிவிப்புக்கு முன்னரே கூட்டணி பேச்சுவார்த்தை, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியீடு என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதன் ஒரு பகுதியாக, தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளில், நகர் பகுதியான திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் பாஜகவின் தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவராகவும் உள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்கிடையில், தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதால், எம்எல்ஏ பதவியை விட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எண்ணத்தில் நயினார் நாகேந்திரன் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாக, கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் இருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். தற்போது தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட பாஜக தலைமையும் அவருக்கு வாய்ப்பு வழங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (மார்ச் 14) திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சொக்கட்டான் தோப்பு பகுதியில் நடைபெற்ற ரேஷன் கடை திறப்பு விழாவில் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அதைத் தொடர்ந்து அவர் அப்பகுதியில் உள்ள மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து, இந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன் எனக்கு ஆதரவு தர வேண்டும் என கூறி வாக்கு சேகரித்தார்.
மேலும் இதன் மூலம், திருநெல்வேலி பகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிட முனைப்பு காட்டி வருவது 100% உறுதியாகி உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமல்லாது, தற்போது வரை தேர்தல் தேதியும் மற்றும் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்படாத நிலையில், நயினார் நாகேந்திரன் உறுதியோடு தாமரை சின்னத்தில் வாக்கு சேகரித்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து முழுமையாக அறிந்து கொள்வதற்காக நயினார் நாகேந்திரனை ஈடிவி பாரத் சார்பில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது அவர் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்பி நவாஸ் கனிக்கு சொந்தமான நிறுவனம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!