திருநெல்வேலி: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்கும் பொருட்டு, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாகத் திருநெல்வேலி தொகுதியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வேட்பாளர் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் சார்ந்த உறவினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தொடர்ச்சியாக பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதனால், நெல்லை தேர்தல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கார்த்திகேயன், தேர்தலில் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகப் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரான கார்த்திகேயனை சந்தித்து, பாரதிய ஜனதா கட்சியினர் மனு கொடுத்தனர்.
இதில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயனை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்கள் புகார் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வழக்கறிஞர் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்ந்தவர்களை மட்டுமே தேர்தல் பறக்கும் படை என சோதனை நடத்தி வருகிறார்கள். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டு வருவதாக நாங்கள் புகார் கொடுத்தும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.
தற்போது மானுர் ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. இதனை திமுகவினரும், காங்கிரஸ் கட்சியினரும் இணைந்து ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்து வருகிறார்கள். பாலஸ்தினபுரம் அருகில் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு நபர்களைப் பறக்கும் படையினர் பிடித்துள்ளனர்.
இது போலத் தொடர்ந்து திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதிக்குள் பணப் பட்டுவாடா செய்பவர்கள் மீது தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், பறக்கும் படையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: Lok Sabha Election 2024 First Phase; ஓய்கிறது பிரசாரம்.. தீர்ப்பெழுதப் போகும் மக்கள்! - LOK SABHA ELECTION 2024