சிவகங்கை: பாஜக ஆட்சிக்கு வந்தால் கடந்த 75 ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள சுயமரியாதை, சமூக நீதி அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்படும் என ஆலங்குடி பகுதியில் இன்று (ஏப்.14) பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
வரும் 19 ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்களின் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகச் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியக் கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகக் களம் காணும் கார்த்திக் சிதம்பரம், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மறமடக்கியில், கை சின்னத்திற்குத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பின் போது பேசிய அவர், “பாஜக அயோத்தியில் ராமர் கோயில் கட்டியுள்ளது, அந்த சர்ச்சைக்குள் நான் போக விரும்பவில்லை, நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலுக்குச் செல்லட்டும், ஆனால் அந்தக் கோயிலை அரசாங்கம் கட்டவில்லை, அது தனியார் டிரஸ்ட் மூலமாகக் கட்டப்பட்டுள்ளது.
நம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மூலமாக உள்ள கோயில் அல்ல, அந்த ட்ரஸ்ட்க்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது. மேலும் அந்த டிரஸ்டிற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கலாம், அதற்கு வரி கிடையாது என்று கூறி, அதன் மூலமாகவும் 8 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வர உள்ளது. அதற்கு அமெரிக்கா லண்டன் போன்ற வெளிநாடுகளில் மார்வாடி சேட்டுகள் பணம் அனுப்புகின்றனர். ஆகமொத்தம் 11 ஆயிரம் கோடி ரூபாய் அந்த டிரஸ்டின் பேரில் இருக்கும்.
இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், மற்ற மாநிலங்களில் உள்ள அந்த கோயிலுக்கு சம்பந்தப்பட்ட பெரிய கோயில்களை அந்த டிரஸ்டின் கீழ் கொண்டு செல்வார்கள். அதன்படி தமிழ்நாட்டில் இரண்டு கோயில்களை பாஜக குறி வைக்கிறார்கள். ஒன்று ராமேஸ்வரம் கோவில், மற்றொன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த இரண்டு கோயிலையும் எடுத்து அந்த டிரஸ்ட்டின் கீழ் கொண்டு செல்ல உள்ளனர்.
அது தனியார் டிரஸ்ட், இங்கே இருப்பது போன்று அமைச்சர்கள் கிடையாது, அதன் பிறகு இந்த கோயில்களை எப்படி நடத்த வேண்டும், எவ்வாறு வழிபட வேண்டும், யார் கோவிலுக்குள் வர வேண்டும், வரக்கூடாது என்று டிரஸ்ட் முடிவு செய்யும் என்று கூறுவார்கள். அதன் பிறகு கோயிலை சுற்றி யார் கடை வைக்க வேண்டும், இந்த சமூகத்தினர் தான் கடை வைக்க வேண்டும், புலால் உண்பவர்கள் கடை வைக்கக் கூடாது என்றும், அதன் பிறகு கோயிலை சுற்றி உள்ள வீடுகளில் யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வார்கள்.
அம்பேத்கர், காந்தி, பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் ஆகியோர் போராடியது அனைத்தும் வீணாகிவிடும். இது எப்படி உள்ளது என்றால், மீண்டும் மனு சாஸ்திரப்படி, என்னென்ன நடந்ததோ அந்த நிலைக்குத் தள்ளப்படுவோமே தவிர, இங்கே உள்ள சமுதாய நீதியெல்லாம் பின்னுக்குத் தள்ளப்படும், இதை மறைமுகமாகச் சொல்கிறேன், இதை படிப்படியாக நிறைவேற்றுவார்கள்.
எனவே, நீங்கள் நினைப்பது போன்று அவர்கள் இல்லை, நமது கற்பனைக்கும் மேலே அவர்கள் மனநிலை போய்க்கொண்டிருக்கிறது, எனவே அது நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்லும். கடந்த 75 ஆண்டுகளாகத் தமிழகத்தில் உள்ள சுயமரியாதை, சமூக நீதி இவை அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்படும்”, என எச்சரித்துள்ளார். இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: தமிழிசை செளந்தரராஜன் ஜூம் மீட்டிங்கில் ஆபாச படங்களைப் பரவ விட்டதா திமுக? - நடந்தது என்ன? - Tamilisai Soundararajan Accused DMK