தஞ்சாவூர்: கும்பகோணம் மடத்துத்தெருவில், இந்து மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலை பிரதிஷ்டையில் பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, “பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு மேலே அமைக்கப்பட்டுள்ள சாமியானாவை அறுப்போம், சிலையின் பீடத்தை அறுப்போம் என போலீசார் மிரட்டுவதாக கேள்விப்பட்டேன். போலீஸ் தேவாலயத்தில் போய் சிலுவை அறுப்பீர்களா? தமிழ்நாட்டில் விநாயகர் சிலை பிரதிஷ்டை விவகாரத்தில் எந்த போலீசாவது அத்துமீறி நடந்து கொண்டால், அவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இதற்கு எதிராக பாஜக, இந்து அமைப்புகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடும்.
சனாதனத்தை மலேரியா, கொசு போல அழிப்பேன் எனக் கூறிய தீய சக்தி உதயநிதி. பழனியில் நடந்தது ஆன்மீக மாநாடே அல்ல. இந்து விரோத மாநாடு. இது ஒரு ஏமாற்று அரசியல், மக்கள் இதனை ஏற்க மாட்டார்கள். இதை தமிழ்நாடு முதலமைச்சரிடம் சொல்லுங்கள், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் அமெரிக்காவிற்குச் சுற்றுலா சென்றுள்ளார்.
முன்பு, நிதி ஈர்ப்பதற்காக குடும்பத்துடன் துபாய் சென்றார். தம்படி காசு கூட வரவில்லை. தமிழ்நாட்டின் மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு போன்றோர் உதயநிதியின் அடிமைகளாகத் தான் உள்ளனர். தமிழகத்தில் நடைபெறுவது இந்து விரோதிகளின் அடிமை அரசாங்கம். தேசிய கல்விக் கொள்கையை பற்றிப் பேச பொன்முடி யார்? மிகப்பெரிய ஊழல்வாதி, அமைச்சராக இருக்கவே அருகதையற்றவர். உயர் கல்வித்துறையில் 294 கல்லூரிகளில் 980 பேராசிரியர்கள் போலி ஆதார் அட்டை அளித்து பணியாற்றியதாக கணக்கு காட்டியதைக் கூட தெரியாத, திறனற்ற, திராணியற்றவர்.
பொன்முடிக்கு முதுகெலும்பு இருந்தால் மு.க.ஸ்டாலின் மகள் சென்னை வேளச்சேரியில் நடத்தும் பள்ளியில் கற்பிக்கப்படும் சமஸ்கிருதம் மற்றும் இந்தியைத் தடுத்து நிறுத்தட்டும். அதுபோலவே டி.ஆர்.பாலு, ஆற்காடு வீராசாமி போன்றோரின் குடும்ப சிபிஎஸ்இ பள்ளிகளில் கருணாநிதி அரசு கொண்டு வந்த சமச்சீர்க் கல்வியை அமல்படுத்தட்டும். ஒரு மொழியைக் கற்பது ஒரு மாணவர் மற்றும் அவரது பெற்றோரைச் சேர்ந்தது. பிற மொழியை படிக்கச் சொல்வது திணிப்பு என்றால், படிக்க விரும்புவதை தடுப்பதும் திணிப்புதானே என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு, மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றும் போது தமிழகத்தில் யார் முதல்வர்? என கேள்வி எழுப்பினார். அது அவசரகால பிரகடனம் என்ற பதிலுக்கு, அப்போது என்ன கம்பு குத்திக் கொண்டு இருந்தீர்களா? என்றும், செய்தியாளர்கள் கேள்வி கேட்க உரிமை உண்டு, ஆனால் கருத்துக்களைத் திணிக்கக் கூடாது என்றார். மேலும், கல்வி மத்திய அரசு பட்டியலில் தான் இருக்க வேண்டும், மத்திய அரசு தான் ஐஐடி, மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது" என பதிலளித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்