ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: பாஜக பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆஜர்! - 4 crores Money Seized Case - 4 CRORES MONEY SEIZED CASE
Rs.4 crore Seized Issue: நாடாளுமன்றத் தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
Published : Jun 6, 2024, 12:45 PM IST
சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சென்னையில் உள்ள அவரது நிறுவனங்களிலிருந்து தேர்தல் செலவுக்காக, பல கோடி ரூபாய் பணம் கொண்டு செல்வதாக கடந்த மாதம் 6ம் தேதி உளவுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தனர்.
அப்போது, ஏசி பெட்டி A1-ல் இருந்த 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் அமர்ந்திருந்த 3 பேர், தனித்தனிப் பைகளில் பணம் வைத்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து உளவுத்துறை போலீசார் தாம்பரம் மாநகர போலீசார் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், நெல்லை எக்ஸ்பிரஸ் தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்ததும் பணம் வைத்திருந்த மூன்று பேரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணிபுரியும் சதீஷ் அவரது சகோதரர் நவீன் மற்றும் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த டிரைவர் பெருமாள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்த ரூ.4 கோடியை பறிமுதல் செய்த போலீசார், அதன் தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரன் நெருங்கிய உறவினரும், தொழிலதிபருமான முருகனின் சாலிகிராமம் வீட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுடன் சோதனை நடத்தினர்.
தேர்தல் பரபரப்புகளுக்கிடையே இவ்வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. பணத்துடன் பிடிபட்ட 3 பேர் மற்றும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இதேபோல் பணம் கை மாறியதாக கூறப்படும் தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு தலைவர் கோவர்தனுக்கு சொந்தமான சென்னை கிரீன்வேஸ் சாலை கொரியன் ரெஸ்டாரண்ட் மற்றும் நீலாங்கரை பகுதியில் உள்ள கோவர்தனின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, கோவையில் வசிக்கும் தமிழ்நாடு பாஜக பொருளாளர் சேகரிடம் கடந்த ஒரு வாரத்துக்கு முன் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
அதையடுத்து, நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், தமிழ்நாடு பாஜக தொழிற்பிரிவு தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகிய 4 பேருக்கும் கடந்த 31ஆம் தேதி சென்னை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது தவிர்க்க முடியாத காரணங்களால் 31ஆம் தேதி ஆஜராக முடியாது எனவும், 4ஆம் தேதிக்குப் பிறகு ஆஜராவதாக வழக்கறிஞர் மூலம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தனது வழக்கறிஞர் பால் கனகராஜுடன் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து, கேசவ விநாயகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், அவர் அளித்த வாக்குமூலத்தையும் பதிவு செய்துள்ளனர். மேலும், அவரளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.